கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக எம்.ஜி.எம்.மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதிமுகவில் பதவி பிரச்சினை நிலவி வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்படப் பலரிடம் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் ’ என குறிப்பிட்டு விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
இந்தச்சூழலில் பன்னீர் சிகிச்சை பெறும் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை இன்று (ஜூலை 16) அவரது உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “லேசான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஜூலை 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நலம் சீராக உள்ளது. மருத்துவ குழுவினரால் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-பிரியா