கொரோனாவிற்கு 72 ஆயிரம் படுக்கைகளும், 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(டிசம்பர் 24)ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த இரண்டு வாரங்களாக ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் செயலாளர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தார். அதன்படி கொரோனா தொற்று உள்ளவர்களின் மாதிரிகள் முழு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையிலும் ஏற்கனவே ஒமைக்ரான் பாதிப்பு தொடங்கியதில் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்து வருகிறோம்.
மேலும், தமிழகத்திலேயே அதற்கான பரிசோதனை மையம் உள்ளதால் அதன் பாதிப்புகள் குறித்து இங்கேயே கண்டறிந்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது, தினந்தோறும் பத்துக்கும் கீழ் குறைவான வகையில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
அந்த பாதிப்பை பொருத்தவரையில் உருமாற்றமடைந்த கொரொனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் 10 மேற்பட்ட நாடுகளில் பிஏ 5 என்று சொல்லக்கூடிய வைரஸ் உள் உருமாற்றம் என்கின்ற வகையில் Bf 7 என்கின்ற புதிய வகை மாற்றமான வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது.
இது குறித்து, நேற்று முன்தினம் தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை எந்த வகையில் கண்காணிக்கிறோம்,
எந்த அளவிற்கு படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது, மருந்து கையிருப்பு எவ்வளவு உள்ளது, ஆக்ஸிஜன் வசதி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 1.5 லட்சம் படுக்கை வசதிகள் அரசு மருத்துவமனையில் உள்ளது. அதில் 72000 படுக்கைகளை கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளது.
மருந்து கையிருப்பை பொருத்தவரையில் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்து கையிருப்பு உள்ளது. அதேபோல ஆக்ஸிஜனை பொருத்தவரையில் சிலிண்டர், கான்சன்ட்ரேட்டர், ஜெனரேட்டர் என்று போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது.
எனவே பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த நிலையில் நேற்று ஒன்றிய சுகாதாரத் துறையின் அமைச்சரோடு காணொளி வாயிலாக கூட்டம் நடந்தது . அந்தக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் அனைத்து சுகாதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் தெரிவித்தேன். அந்த வகையில் ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டம் முறையில் 3% பேருக்கு இன்று முதல் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கோலாலம்பூர், துபாய், கொழும்பு, தோகா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 37 பேர் இரண்டாம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் யாருக்கும் எந்த விதமான அறிகுறியும் இல்லை. மேலும், வெளிநாடுகளில் இருந்து விமான மூலம் தமிழகத்திற்கு வரக்கூடியவர்களுக்கு உடல் வெப்பநிலை என்பது பரிசோதனை செய்யப்படுகிறது.
அப்படி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் பொழுது அவர்களில் யாருக்கேனும் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அவர்களுக்கு உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.
கலை.ரா
.