கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வம் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி பன்னீரைக் கட்சியிலிருந்து நீக்க, பன்னீர் செல்வம் எடப்பாடியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை பன்னீர் வகித்து வந்த நிலையில் அந்த பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளில் எடப்பாடி ஈடுபட்டுள்ளார்.
அதுபோன்று ஓ.பன்னீர் செல்வமும் தனது நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை செய்வது எனத் தொடர்ந்து பலரை சந்தித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஓபிஎஸ் தரப்பில் சளி, காய்ச்சலுக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வம் விரைந்து குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வத்துக்கு கட்சியில் இடமில்லை என கூறி அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பன்னீரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும், எதிர்க்கட்சித் துணை தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பன்னீரை பழனிசாமி தரப்பினர் திமுகவின் கைக்கூலி, திமுகவின் பி-டீம் என்று விமர்சிப்பதோடு திமுக அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரத்தின் போது முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கைக்கட்டி வேடிக்கை பார்த்தது. பன்னீருக்கு திமுக ஆதரவளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமியும் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா