முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
முன் குறிப்பு:
எனது சொந்தக் காரணங்களினால் இப்பத்தியை அவ்வப்போது தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன். நான் The show must go on என்ற கூற்றில் நம்பிக்கை கொண்ட ஆசாமி கிடையாது. அது ஒரு விதமான மேற்கத்தியத் தொழில் பாங்கு (Western professionalism). அந்தப் பாங்கினைத் தொடர்ந்து செயல்படுத்தவே ஒரு விதமான சமூக பொருளாதாரச் சலுகை (privilege) அவசியம். அதாவது உணவுப் பிரச்சினை இல்லாதவர்களே உண்ணாவிரதம் இருக்க முடியும் (வணக்கம், காந்தியாரே) என்பது போல. எனக்கு உணவுப் பிரச்சினை ஏதும் கிடையாது. ஆனால், அவ்வபோது சொந்த சவால்கள் ஏற்படின், அதை முன்னிறுத்தும் இடத்திலேயே நான் இருக்கிறேன். இதை ஒப்புக்கொள்வதில் தயக்கமில்லை.
எனக்கு என்ன நிகழ்ந்தாலும் நான் தொடர்ந்து பொதுப் பணியாற்றுவேன் அல்லது பணியாற்றும் திறன் உள்ளது என்று சொல்பவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு (கேள்விகளும் உண்டு). நான் எழுதும் அரசியலின் முதல் படி, என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஆக இந்தப் பத்தியைத் தட்டுத் தடுமாறி, விட்ட வண்ணம் தொட்ட வண்ணமாக, என்னுடன் சேர்ந்து பயணிப்பவர்களுக்கு மன்னிப்பு கலந்த நெஞ்சார்ந்த நன்றிகள். நிற்க.
கடைசியாக இந்தப் பத்தியில் காப்பர் (செம்பு) காலனியம் என்ற ஒரு அரசியல் பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜாம்பியா போன்ற நாடுகள் செம்பு வளங்களை அனுபவிக்க முடியாமல் போனதற்கு காரணம் காலனிய அரசியல் என்பதாகும். ஆனாலும் விடுதலை பெற்ற ஜாம்பியா, சுரங்கங்களை தேசியமயமாக்கிய போதிலும் இந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. அவ்வளங்களை அனுபவிக்க முடியவில்லை. தொழில்நுட்பத் தேவைகள் முதல், வெளிநாட்டு (வெள்ளையர்களின்) திறமைகள் ஆகிய பல்வேறு தடைகள் இதற்குக் காரணமாக இருந்தன.
சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கத்தியப் பொருளாதார ஆதாரங்கள் ஜாம்பியாவை விட்டு வெளியேற்றப்படுகின்றன. அவற்றோடு சேர்ந்து முதலீட்டியமும், தொழில்நுட்பங்களும் வெளியேறுவதால் ஜாம்பியப் பொருளாதாரம் வரலாறு காணாத பணவீக்கத்தை அனுபவிக்கிறது. இச்சூழலில் அந்நாளின் ஜாம்பிய அதிபர் கவுண்டா வேறு வழியின்றிப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதியுதவி கேட்டுத் தஞ்சமடைகிறார். இந்தச் சூழலில் மேற்கத்திய அரசுகளும், நிதி நிறுவனங்களும் செம்புச் சுரங்கங்களை மீண்டும் எவ்வாறு கைப்பற்றின என்ற கேள்வி நம்முன் நிற்கிறது.
இக்கேள்விகளுக்கு விடை தேடும் முன், செம்பு என்ற இயற்கைத் தாதுவின் இயந்திர, தொழில் மற்றும் வணிக முக்கியத்துவத்தைச் சற்றே தெரிந்துகொள்வது சற்று உபயோகமானது.
செம்பு என்னும் புராதன உலோகம்
மனித சமுதாயம் தனது நாகரிகத்தில் முதன் முதலாகக் கண்டுபிடித்து தினசரி உபயோகத்திற்கு கொண்டு வந்த முதல் உலோகம் செம்பு என நம்பப்படுகிறது. மிகப் பண்டைய காலத்தில் செப்பு நாணயங்கள் இதற்கு ஒரு சாட்சி. ஆக செம்பு ஆரம்ப காலத்தில் இன்றைய தங்கம் போல மதிப்பு மிக்க ஒரு உலோகமாக இருந்திருக்கிறது.
2017ஆம் ஆண்டுக் கணக்கின் படி இன்றைய செம்பு உற்பத்தியில் முன்னனியில் உள்ள ஏழு நாடுகள் சிலே (5330 மெட்ரிக் டன்கள்), பெரு (2390), சீனா (1860), அமெரிக்கா (1270), ஆஸ்திரேலியா (920), காங்கோ (850), ஜாம்பியா (755).
இந்தியா 2017ஆம் ஆண்டில் 125 மெட்ரிக் டன் செம்பு உற்பத்தி செய்தது.
இந்த முதல் ஏழு நாடுகளில் சிலே, பெரு – ஸ்பானிய காலனிய தேசங்கள். காங்கோ – பெல்ஜிய காலனிய தேசம். ஜாம்பியா பிரிட்டனின் காலனியக் ‘கொடையின்’ கீழ் உருவாக்கப்பட்ட நாடு. ஆக உலகின் செம்பு கிடைக்கும் ஏழு நாடுகளில் நான்கு நாடுகளின் செம்புச் சுரங்கங்கள் காலனிய ஆதிக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பத்தியில் சிலே, பெரு, காங்கோ பற்றியெல்லாம் பேசாததற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே: எனக்கு ஸ்பானிய, டச்சு, ஃப்ரெஞ்ச், ஃப்ளெமிஷ் மொழிகள் தெரியாது. மேலும் ஸ்பானிய பெல்ஜிய காலனியம் எனக்கு அந்த அளவுக்கு பரிச்சயம் கிடையாது. ஜாம்பியாவும், ஜாம்பியாவின் பிரிட்டனும் எனக்கு ஓரளவு தெரியும்.
சிலேவும் பெருவும் உலகின் முதல் இரு இடங்களில் இருந்தாலும் ஜாம்பியாவின் அரசியல் தலைமையே பன்னாட்டு செப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான ஒரு அமைப்பை (The Intergovernmental Council of Copper Exporting Countries) நிறுவியது என்பது முக்கியமானது ஆகும். ஆக செம்பு உற்பத்தியின் காலனியத்தை வேரறுப்பதில் ஜாம்பியா முக்கியப் பங்காற்ற முயற்சித்தது. ஆனால் ஒத்த கருத்தின்மையால் இந்த அமைப்பு பலனளிக்கவில்லை (பார்க்க கடந்த பத்தி).
செம்பின் இன்றைய பலன்
இன்றைய உலகில் செம்பு என்னும் உலோகத்தின் பயன்தான் என்ன? இவற்றின் தொழில்நுட்பப் பயன்கள் மிகப்பல: உலகின் பல நாடுகளின் நாணயங்கள் செம்பு உலோகத்தில் இன்றளவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. துப்பாக்கி, தோட்டாக்கள், போர்க் கருவிகளை உருவாக்க செம்பு உலோகம் உபயோகப்படுத்தப்படுகிறது. செம்பு சூடு தாங்கும் உலோகமாகும். அதனாலோயே மின் கம்பிகள், மின் கருவிகளில் எல்லாம் செம்பு உபயோகப்படுத்தப்படுகிறது. முக்கியமாக தொலைத்தொடர் மின் கடத்துதல்களுக்கு செம்பு உபயோகப்படுத்தப்படுகிறது. மின்னணுச் சாதனங்களில் செம்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பனி பொழியும் மேற்கத்திய வீடுகளில், அல்லது கட்டிடங்களில் செம்புக் குழாய்களின் வழியாகவே சுடுநீர் வழங்கப்படுகிறது. அதே போன்று செம்புக் குழாய்கள் பனிக்காலத்தில் வெடிக்காமல் நீரினை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செலுத்துகிறது.
அது மட்டுமல்ல. இன்றைய ஆட்டொமொபைல் தொழில்கள் செம்பு உலோகம் இன்றி நடைபெற முடியாது. ஒரு கார் நகர எரிபொருள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு ஒரு காரை உற்பத்தி செய்வதில் செம்பின் முக்கியத்துவம் உள்ளது. கார், ரேடியேட்டர், ப்ரேக், பேரிங், என பல பாகங்களும் செம்பின்றி வேலை செய்யாது. ஒரு சாதாரண காரில் 20 கிலோ செம்பு உபயோகப்படுத்தப்படுகிறது. சொகுசு அல்லது சற்றே வசதியான கார்களில் 45 கிலோ செம்பு உபயோகப்படுத்தப்படுகிறது.
சமீபகாலம் வரை, உலகின் மிக முக்கிய கார் மற்றும் பேருந்துச் சந்தைகள் மேற்குலகிலேயே இருந்துவந்திருக்கின்றன. அமெரிக்க்க, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, சீனா, ஃப்ரான்ஸ், பிரிட்டன், ரஷியா, ஸ்பெயின், ப்ரேசில் ஆகிய நாடுகள் உலகின் கார் மற்றும் பேருந்து வர்த்தகத்தை நிர்ணயம் செய்யும் நாடுகளாக இருந்துவருகின்றன. எனவே இந்நாடுகள் தங்கள் உற்பத்தி விலைகளைக் குறைக்க வேண்டுமெனில் தாதுக்களின் உற்பத்தி விலையைக் குறைக்க வேண்டும். அதாவது, கச்சாப் பொருள்களின் விலையைக் குறைப்பதின் மூலம் உற்பத்தி விலையை அடியோடு குறைக்க முடியும்.
ஆனால், சமீபகாலமாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, கிழக்காசிய நாடுகளின் நுகர்வோர்களின் வளர்ச்சி காரணமாகவும், நடுத்தர மக்களின் வாங்கும் திறன் சற்றே அதிகம் ஆனதாலும் கார், மின் உற்பத்தித் தேவைகள் அதிகமாகிவருகின்றன. எனவே செம்பு உலோகத்தின் தேவை பன்மடங்கு அதிகரித்துவருகிறது.
அலைபேசி உற்பத்தியில் செம்பு உலோகத்தின் உபயோகம் அதிகரித்து வருவதும் இதற்கு மற்றொரு காரணம். யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி அலைபேசியில் அறுபத்திரண்டுக்கும் மேற்பட்ட உலோகங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் ஐந்து உலோகங்களே (செம்பு, தங்கம், பிளாட்டினம், வெள்ளி, டங்ஸ்டன்) அலைபேசியில் 40 சதவீதத்திற்கும் மேலாக உபயோகப்படுகிறது. செம்பு இவ்வுலோகங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சற்றே விலை குறைவான அலைபேசிகளில் தங்கம் இருக்கும் இடங்களில் செம்பு இருத்தப்படுகிறது. உலகம் முழுதும் விலை குறைவான அலைபேசிகளே அதிகம் புழக்கத்தில் உள்ளன.
இந்த வருடம் (2018) ஏப்ரல் மாதம் சிலேயில் உள்ள சாந்தியாகோ நகரத்தில் நடைபெற்ற பதினேழாவது உலக செம்புச் சந்தை மாநாடு செம்பு உற்பத்தியின் தேவைக்கும் உற்பத்திக்கும் அதிக இடைவெளி உள்ளதைச் சுட்டிக்காட்டியது. ஒரு ஆய்வின்படி 2034ஆம் ஆண்டில் 15 மில்லியன் டன் செம்பு உற்பத்தி குறைவாக இருக்கும்.
செம்பின் மதிப்பு இப்படியிருக்கிறது.
அரசாங்க மதிப்பீடு ஒன்றின்படி 2018ஆம் ஆண்டு ஜாம்பியா சுரங்கங்களிலிருந்து ஒரு மில்லியன் டன் செம்பு தோண்டப்படும். ஜாம்பியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் செம்பு வர்த்தகம் 75 சதவீதம். இது ஒரு நாட்டின் மொத்த வளத்தையுமே ஒரு உலோகத்தின் மீது அடகு வைப்பது போலாகும். ஆனால் அதை விட முக்கியமானது: ஜாம்பியாவின் ஒட்டுமொத்த செம்பு உற்பத்தியினால் விளையக்கூடிய உள்ளூர் வருவாய் என்னவோ வெறும் இரண்டு சதவீதம்தான்.
அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]
கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]
கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]
கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]
கட்டுரை 12: [சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்]