சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்

அரசியல் சிறப்புக் கட்டுரை

 

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

ஐரோப்பாவில் 1500ஆம் ஆண்டுகளின் வாக்கில் ஆரம்பித்த இயந்திரப் புரட்சியானது உலோக மற்றும் தாதுக்களின் வேட்டைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த இயந்திரப் புரட்சியின் பசிக்குத் தீனி போட வேண்டுமெனில், முதலில் இயந்திரங்கள் தேவை. அதற்கு உலோகங்கள் தேவை. இந்த உலோகங்கள் ஐரோப்பாவை விட ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, ஆசியக் கண்டங்களில் ஏராளமாக இருந்தன; இருக்கின்றன. இவ்வுலோகங்களை பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேயப் பெரும் முதலாளிகள் ஐரோப்பிய இயந்திரப் பேட்டைக்குள் கொண்டுவருவதின் மூலமாக லாபம் ஈட்ட முடியும் எனக் கண்டுகொண்டனர்.

இன்றைய சூழல் போலப் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் எதுவும் நடப்பில் இல்லாத சூழ்நிலையில் காலனிய ஆதிக்கத்தின் துணையோடு உலோகங்களைக் கடத்தி வருவது எளிதாக இருந்தது. உதாரணமாக ஜாம்பியா செப்பு, வைரம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்த ஜாம்பியா (முன்னாள் ரொடேஷியா) அங்கு இயற்கை வளங்களைச் சுரண்ட ஆரம்பித்தபோது அங்கே அரசு கிடையாது; ஒப்பந்தம் போட ஜாம்பியாவில் இறையாண்மை என்ற கருத்தியலும் கிடையாது. பிரிட்டன் ஜாம்பியாவைக் கிட்டத்தட்ட ஒரு தேசமாக, பிரிட்டனுக்குச் சேவகம் செய்யும் நிலமாக மாற்றுகிறது. இம்மாதிரி தேசங்கள் உருவாக்கப்பட்டதைக் காரணம் காட்டியே இன்றைய வலதுசாரிகள் ‘வளரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் நாகரிகம், ஜனநாயகம், இறையாண்மை ஆகியவற்றைக் காலனியம் அறிமுகப்படுத்தியது’ எனப் பொய்யுரை பரப்பிவருகின்றனர்.

ஜாம்பியாவில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்ட யாருக்கும் வரி, கப்பம், சுங்கம் எதுவும் கட்டத் தேவையில்லை. இச்சுரங்கங்களில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் கிடையாது. இந்தச் சூழல் ஜாம்பியாவுக்கு மட்டுமல்ல. ஆப்பிரிக்காவில் உள்ள இயற்கைக் கனிம வளங்கள் நிறைந்த அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இன்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்கில் மூடப்பட்ட வைரச் சுரங்கங்கள், அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, காலனிய அடக்குமுறைகளையும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்திவருவதைப் பார்க்கலாம். இம்மாதிரியான சுரண்டல்கள் கிட்டத்தட்ட நூறு முதல் நூற்றியம்பது வருடங்களாக நடந்துவந்துள்ளன. அது மட்டுமல்ல, ஜாம்பியா சுதந்திரம் அடைந்த பின்னரும் இது தொடர்கிறது என்பதே முக்கியம்.

Copper and colonialism in uk - Murali Shanmugavelan

சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டம்

1930களிலும், 1940களிலும் ஜாம்பிய மக்கள் இந்தக் காலனியச் சுரண்டலைப் பொறுக்க முடியாமல் மக்கள் போராட்டம் வெடித்தது. மக்கள் போராட்டத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் இயற்கை வளங்களை ஐரோப்பியத் தொழிற்பேட்டைக்கு விற்று வரும் லாபத்தினால், உள்ளூர் விளைநிலங்களை சிசில் ரோட்ஸ் போன்ற பிரிட்டிஷ் தங்க, வைரச் சுரங்க அதிபர்கள் அபகரிக்க ஆரம்பித்தனர். இது மக்களின் தினசரி வாழ்வாதாரத்தைப் பாதிக்க ஆரம்பித்தது.

சுரங்கச் சுரண்டலுக்கும், உள்ளூர்ப் பட்டினிக்கும், காலனிய ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள உறவுகள் பற்றி உள்ளூர் மக்களிடம் போராளிகள் உரையாடத் தொடங்குகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனிய சாம்ராஜ்ஜியங்கள் பெரும் கடன்களில் இருந்தன. பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் வறுமை, நோய், கட்டுமானச் சீரழிவு ஆகியவை பெரிதளவில் பாதித்திருந்தன. நாஜிக்களின் தோல்வியை அடுத்து உலக அரங்குகளில் ஜனநாயகம், மனித உரிமை போன்ற குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியிருந்தன. ஐக்கிய நாடுகளின் சபை, மனித உரிமைக் கழகங்கள் எனப் பல்வேறு அமைப்புகள் ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய சூழல். எல்லாவற்றுக்கும் மேலாக காலனிய நாடுகள் தங்களது மனித உரிமைகளைப் பற்றியும், இறையாண்மை குறித்தும் கவலைப்பட்டுப் பேசும்போது, ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக் குரல்களை ஒதுக்குவது போலித்தனம்.

தென்னாப்பிரிக்கா போன்ற நாட்டின் விடுதலை இயக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா போன்றவர்களைத் தீவிரவாதி என்று பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மார்க்கரெட் தாட்சர் (அவரது குடும்பத்தினருக்குத் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்தது) போன்றவர்கள் பகிரங்கமாகப் பொய்யுரை சொல்லி வருவதும் தொடர்ந்தது.

ஆனால், ஜாம்பிய சுதந்திரப் போராட்டம் (ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன) பிரிட்டனுக்கு மிகுந்த தலைவலி கொடுத்தது. அதே சமயத்தில் ஜாம்பியாவில் உள்ள செப்பு வளங்களையும் அங்கு வெள்ளையர்கள் கைப்பற்றியிருந்த 15.5 மில்லியன் விளைநிலங்களையும் அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை. உலக அரசியலோ பிரிட்டனுக்கு எதிரான நிலை. தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல வெள்ளை நிறத்தவர்களும் மண்ணின் மைந்தர்கள் போன்ற நிலைக்கு ஜாம்பியாவில் அங்கீகாரம் இல்லை. இச்சூழ்நிலையில்தான் 1964ஆம் ஆண்டில் பிரிட்டன் ஜாம்பியாவுக்கு விடுதலை அளித்தது.

Copper and colonialism in uk - Murali Shanmugavelan

விடுதலைக்குப் பின் வறுமை

அப்போதும்கூட பிரிட்டன் [லங்காஸ்டர் அறிக்கை](https://goo.gl/yNpMwb) என்ற ஒப்பந்தத்தை வரைவு செய்தது. இந்த அறிக்கையினால் வெள்ளையர்கள் தங்கள் நிலங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் மூன்று சதவிகித வெள்ளையர்களுக்கு இருபது சதவிகித இடஒதுக்கீடு செய்யப்பட்டது (இப்பத்தியின் மூன்றாவது கட்டுரையில் இது பற்றி மேலும் படிக்கலாம்).

சுதந்திரம் பெற்ற ஜாம்பியாவுக்கோ நிதி நெருக்கடி. இயற்கை வளங்களைத் தொடர்ந்து அனுபவிக்க, முதலில் தொழில்நுட்பம் தேவை. 1965ஆம் ஆண்டு ஜாம்பியா பன்னாட்டு நிதி நிறுவனத்தில் உறுப்பினரானது. இச்சமயத்தில் சுரங்கங்கள் எதுவும் ஜாம்பிய அரசின் கையில் இல்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர ஜாம்பியாவின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா ஜாம்பியச் சுரங்கங்களை தேசியமயமாக்கினார். இதைத் தொடர்ந்து பன்னாட்டுச் செப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான ஓர் அமைப்பையும் நிறுவினார் (The Intergovernmental Council of Copper Exporting Countries). இந்த அமைப்பின் நோக்கம் காலனியத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இயற்கை வளங்களைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதின் மூலம் உலக செப்பு வர்த்தகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதாகும். இந்த அமைப்பில் பெரு, சிலெ, ஜைர் போன்ற முன்னாள் காலனிய நாடுகளும் உறுப்பினர்களாயின. ஆனால், ஒத்த கருத்தின்மையால் இந்த அமைப்பு வெற்றி பெறவில்லை.

அது மட்டுமல்ல, ஜாம்பியாவிடம் (மற்ற உறுப்பினர் நாடுகளிலும்) உலகத் தரம் கொண்ட பொறியாளர்கள் இல்லாததால் ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள பொறியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ‘உலகத் தரம்’ வாய்ந்த ஊதியங்கள் கொடுக்க முடியவில்லை. சுரங்க மேலாண்மை, நிர்வாகம் போன்ற நிறுவன உத்திகளை ஜாம்பியாவுக்குக் கற்றுக்கொடுக்க பிரிட்டன் அருகில் இல்லை. சுரண்டல் மூலம் செப்பு உற்பத்தி செய்வது ஒரு வழி. ஆனால், ஜனநாயக முறையில் அனைத்து ஊழியர்களுக்கும் சரியான ஊதியமளித்து உற்பத்தி செய்வது மிகுந்த பொருட்செலவு கொண்டது. இதன் விளைவாலும், காலனிய நாடுகளின் உலக வர்த்தக விளையாட்டினாலும் செப்பின் விலை உலகச் சந்தையில் வீழ்ச்சி அடைந்தது.

ஜாம்பியப் பொருளாதாரம் வரலாறு காணாத பணவீக்கத்தை அனுபவிக்கிறது. மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்குகிறார்கள். எங்கும் வன்முறை. அமைதியின்மை.

இச்சூழ்நிலையில்தான் 1980களில் அதிபர் கவுண்டா வேறு வழியின்றி பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதியுதவி கேட்டுத் தஞ்சமடைகிறார்.

இந்தச் சூழலுக்காகத்தான் மேற்கத்திய முன்னாள் காலனிய, இன்னாள் ஜனநாயக நாடுகள் காத்திருந்தது போல ஜாம்பியாவிற்குள் மீண்டும் நுழைகின்றன.

செப்புக் காலனியம் பின் வழியில் மீண்டும் எவ்வாறு நுழைந்தது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Copper and colonialism in uk - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]

கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]

கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]

கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]

கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]

கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]

கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]

கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]

கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]

கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]

கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]

கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *