கூட்டுறவுத் துறையில் கட்சிக்காரர்களுக்கே வேலை: அமைச்சர் உத்தரவு என்னவாகும்?

அரசியல்

தமிழகத்தில் மொத்தம் 34,774 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதற்கு, விற்பனையாளர்கள் மற்றும் பேக்கர்ஸ் (கட்டுனர்) என 6,503 காலி பணியிடங்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

விற்பனையாளர் வேலைக்கு 12ஆம் வகுப்புத் தேர்ச்சியும், கட்டுனர் வேலைக்கு 10ஆம் வகுப்புத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 6,503 பதவிகளுக்கு சுமார் 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர்.

இப்படி விண்ணப்பித்த பலரிடம் ஒவ்வொரு ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், மாநகர வார்டு செயலாளர்கள், விற்பனையாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் முதல் 7லட்சம் ரூபாய் வரையில் பெரும் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.

இந்தசூழலில்தான் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் மாற்றப்பட்டன. ஐ.பெரியசாமியிடமிருந்த கூட்டுறவுத் துறை பெரியகருப்பனுக்கு மாற்றப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக உள்ளாட்சித் துறை பெரியசாமிக்கு மாற்றப்பட்டது.

இதனால் வேலைக்குப் பணம் கொடுத்தவர்கள் மத்தியில் சலசலப்புகள் ஏற்பட்டது.

ஆனால் 13ஆம் தேதியே அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை செயலகம் சென்றார். அங்கு கூட்டுறவுத் துறை பதிவாளரை அழைத்தார்.

கட்சிகாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. அந்த வேலைகளில் நான் ஏற்கனவே தந்திருந்த பட்டியல்படி வேலைக்கான உத்தரவுகளை தர வேண்டும்.

இதை ஒருவேண்டுகோளாகவே நான் உங்களிடம் வைக்கிறேன். கட்சிக்காரர்கள் குடும்பதிற்கு வேலை தர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதை எப்படியாவது நிறைவேற்றித் தாருங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதோடு நிற்காமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவுத் துறை அதிகாரிகளையும் தொடர்புகொண்டு கட்சிக்காரர்களுக்கே முன்னுரிமை தாருங்கள் என்று இப்போதும் வேண்டுகோளாக வைத்துக்கொண்டிருக்கிறார்.

7500 ரூபாய் சம்பளத்துக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்களே நியாயமா? என்று கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

அப்போது அவர், “மறைந்த முதல்வர் கலைஞர் 2010இல் முதல்வராக இருந்தபோது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பட்டியலை எடுத்து சீனியாரிட்டிபடி, ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் விற்பனையாளர்களை நியமித்தார். .

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக டிஆர்பி மூலம் நியமனம் செய்து லஞ்சத்துக்கு வழிவகை செய்தனர்.

தற்போது திமுக ஆட்சியில் ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு ஐந்து லட்சம் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரையில் கழக நிர்வாகிகள் எதிர்க்கட்சிகாரர்களிடம் கூட வசூல் செய்திருப்பதாக புகார்கள் வந்து குவிந்துள்ளன” என்றார்.

புதிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் என்ன செய்யப்போகிறார் என்பதையே எல்லோரும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வணங்காமுடி

தீரன் பட பாணி: வட இந்தியாவில்  கெத்து காட்டிய தமிழக போலீஸ்!

நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *