மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு அறிவித்தது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. தமிழக அரசு அனுப்பும் மசோதாக்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அவ்வப்போது மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பது என ஆளுநர் ரவி – தமிழக அரசு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து இணைவேந்தராகிய தன்னிடம் ஆலோசனை நடத்தவில்லை. அதன் காரணமாக விழாவினை புறக்கணிப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. அவர் அளித்த பேட்டியில், ”மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்கலை கழகத்தின் இணைவேந்தர் முறையில் என்னிடமும், தமிழக அரசிடமும் ஆலோசிக்காமல் விழாவின் தேதி, அதில் பங்கேற்கும் விருந்தினர்களின் பெயரும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தால் பல்கலை கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் இருந்து முறையான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக இணையமைச்சர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பார்க்கும்போது பல்கலை கழகங்கள், மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துவதாக சந்தேகம் எழுகிறது. அதனால் இணை வேந்தர் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மேடையினை பாஜகவின் பிரச்சார மேடையாக ஆளுநர் பயன்படுத்துகிறார். மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்திய ஆளும் கட்சிக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை” என்றார்.
நேற்று ஆளுநரின் திராவிடம் பேச்சுக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எதிர்வினையாற்றிய நிலையில், இன்று ஆளுநருக்கு எதிராக பொன்முடி கருத்து வெளியிட்டுள்ளார்.
–கிறிஸ்டோபர் ஜெமா