பாலியல் தொல்லை : குற்றவாளியான முன்னாள் டிஜிபி – வழக்கு கடந்து வந்த பாதை!

அரசியல்

தமிழ்நாட்டில் டிஜிபி அந்தஸ்தில் இருந்த அதிகாரி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் தாஸ். 1989ல் தமிழக ஐபிஎஸ் அதிகாரியானார். பல சர்ச்சைகளிலும் புகார்களிலும் சிக்கியவர்.

இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, கூடங்குளம் அணு மின்நிலைய துப்பாக்கிச் சூடு, முல்லைப் பெரியாறு அணைக்காக பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் என இவர் மீதான புகார் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதனால் இவர் பலமுறை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். தூத்துக்குடி எஸ்.பி, தென் மண்டல ஐ.ஜி, சென்னை தெற்கு இணை ஆணையர், சிறப்பு டிஜிபி என பல்வேறு பதவி வகித்த ராஜேஷ் தாஸ், கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் சிக்கினார்.

என்ன நடந்தது?

Convicted former DGP rajesh dass

2021 பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு சென்றார். முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக ராஜேஷ் தாஸும் சென்றார்.

நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து மீண்டும் சென்னைக்கு திரும்பும் போது அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகள் ராஜேஷ் தாஸுக்கு சல்யூட் அடிக்க காத்திருந்தனர். அவர்களில் ஒருவராக குறிப்பிட்ட மாவட்ட பெண் எஸ்.பியும் காத்திருந்தார்.

ராஜேஷ் தாஸ் கார் வந்ததும் பெண் எஸ்.பி.யும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு பெண் எஸ்.பியிடம், “உங்களிடம் பேச வேண்டும் வாங்க” என காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். கொஞ்ச தூரம் போனதும் பெண் எஸ்.பி.யின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். ராஜேஷ் தாஸின் தொல்லையை சகித்துக்கொள்ள முடியாமல் எரிச்சலடைந்திருக்கிறார் பெண் எஸ்.பி.

சென்னை செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டையில் உயரதிகாரிகள் நின்று கொண்டிருக்க, அங்கு ராஜேஷ் தாஷின் காரும் நின்றது. அப்போது பெண் எஸ்.பி கீழே இறங்கிவிட்டார். ராஜேஷ் தாஸ் சென்னை நோக்கி சென்றார்.

இந்த சம்பவம் பிப்ரவரி 21ஆம் தேதி நடக்க, 22ஆம் தேதி பெண் எஸ்.பி காவல்துறை தலைமையிடம் புகார் கொடுக்க சென்னை கிளம்பினார். இந்த தகவலை அறிந்து கொண்ட ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி. கடந்து வரும் மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி.க்களிடம் சொல்லி அவரை சென்னை வரவிடாமல் தடுக்க முயன்றார்.

ஆனால் அவரது கார் செங்கல்பட்டு வரை கடந்துவிட்டது. செங்கல்பட்டை அடைந்ததும், அந்த மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கண்ணன் அதிரடி படையுடன் வந்து பெண் எஸ்.பியின் காரை நிறுத்தி சாவியையும் எடுத்துக்கொண்டார்.

Convicted former DGP rajesh dass

“ராஜேஷ் தாஸ் லைனில் இருக்கிறார். அவரிடம் போனில் பேசினால் தான் வழிவிடுவேன்… பேசுங்கள்” என்று எஸ்.பி, கண்ணன் மிரட்ட அதெல்லாம் முடியாது, நான் போக வேண்டும் என்று அவர்களை எதிர்த்துவிட்டு சென்னை வந்தார்.

அப்போதைய டிஜிபி திரிபாதியிடமும், உள் துறை செயலாளரிடமும் புகார் கொடுத்தார் பெண் எஸ்.பி. ஏற்கனவே ஐஜி முருகன் மீது மற்றொரு பெண் எஸ்.பி கொடுத்த புகார் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இதனால் இந்த வழக்கும் அப்படி ஆகிவிடுமோ என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. எதிர்க்கட்சியாக இருந்த முதல்வர் ஸ்டாலின், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தால் ராஜேஸ் தாஸ் வழக்கில் நிச்சயம் தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்தார். திமுக. எம்.பி. கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தியது.

இந்த பாலியல் குற்றச்சாட்டு நடந்த சம்பவம் தேர்தல் காலம் என்பதாலும், அதுவும் முதல்வர் பாதுகாப்புக்காக சென்ற அதிகாரி தவறாக நடந்து கொண்டதாலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஐபிசி 354A(2), 341, 506(1) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 1998ன் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது.

முத்தம்… பாடச் சொல்லி தொந்தரவு…

அந்த எப்.ஐ.ஆரில், “காரில் வசதியாக உட்கார ராஜேஷ் தாஸ் தலையணை கொடுத்தார். பாட்டு பாடுமாறு வற்புறுத்தினார். வேறு வழியின்றி பாட்டு பாடினேன். 20 நிமிடம் வரை என்னை பாட வைத்து கேட்டார். பாடி முடித்ததும் வாழ்த்து சொல்வது போல் கைகளை பிடித்து சீண்டலில் ஈடுபட்டார். கையில் முத்தம் கொடுத்தார்.

ஒருமுறை அவரது அலுவலகத்துக்கு சென்ற போது என்னை போட்டோ எடுத்து வைத்திருக்கிறார். அதையும் காரில் செல்லும் போது காண்பித்தார். கார், உளுந்தூர்பேட்டை வந்ததும் அங்கு உயரதிகாரிகள் இருந்ததால் என்னை இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி டிஜிபியிடம் புகாரளிக்க போறேன் என்று ஐஜி ஜெயராமனிடம் சொல்லிவிட்டு வந்தேன். நான் சென்னை கிளம்பிய சில நிமிடங்களில் என்னை ராஜேஷ் தாஸ் தொடர்பு கொண்டார். நான் போனை எடுக்கவில்லை.

அதனால் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாஉல் ஹக், திருப்பூர் எஸ்.பி.திஷா மிட்டல், கடலூர் எஸ்.பி.அபினவ் ஆகியோர் மூலம் என்னை தொடர்பு கொண்டு சென்னை செல்வதை தடுக்க முயன்றார். இவர்கள் என்னிடம் போனில் பேசும் போது, ராஜேஷ் தாஸ் மீது புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ராஜேஷ் தாஸின் நடவடிக்கையால் மனதளவிலும், குடும்ப வாழ்க்கை அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று பெண் எஸ்.பி கூறினார்” என சிபிசிஐடி எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தாமாக முன் வந்து வழக்கு

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து ராஜேஷ் தாஸ் விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்தார். தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிரிச்சிகரமானது என சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்தது.

இந்த வழக்கை விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் நடவடிக்கையை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது தேர்தல் நடைமுறை அமலில் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற ராஜேஷ் தாஸ்

Convicted former DGP rajesh dass

தொடர்ந்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வந்தது. இந்நிலையில் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

எனக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தொடர்ச்சியான உத்தரவுகள் நியாயமான விசாரணைக்கான வாய்ப்புகளைத் தடுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தரப்பு வாதிட்டது. உயர் நீதிமன்றத்தின் அனைத்து முந்தைய உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

அதாவது, விசாரணையை ஒத்திவைக்காமல் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை அமைப்புக்கு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அழுத்தம் ஏற்படுகிறது” என்று ராஜேஷ் தாஸ் தரப்பு தெரிவித்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ’உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கை முடித்து வைத்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகளின் படி அல்லாமல், விசாரணை நீதிமன்றமான விழுப்புரம் நீதிமன்றம் சுயமாக இந்த வழக்கை விசாரிக்கலாம்’ என்று கூறியது. அதேசமயம் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற ராஜேஷ் தாஸின் கோரிக்கையை நிராகரித்தது.

விசாரணையும் தீர்ப்பும்!

Convicted former DGP rajesh dass

இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. 2021 ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

அரசு தரப்பு பட்டியலிடப்பட்ட 128 சாட்சிகளில் 68 சாட்சியங்களிடம் விசாரித்தது. 23 சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன். முன்னாள் டிஜிபி திரிபாதியும் விசாரணைக்கு ஆஜரானார். ராஜேஷ் தாஸும், கண்ணனும் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜூன் 16ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி அறிவித்தார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, இன்று ராஜேஷ் தாஸும், எஸ்.பி.கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிபதி புஷ்பராணி தனது இருக்கைக்கு வந்து அமர்ந்ததும், ”இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்மானித்திருக்கிறோம். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நாங்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறினர்.

தொடர்ந்து நீதிபதி, ஏ1 மீது இந்திய தண்டனை சட்டம் 354ஏ பிரிவின் கீழ் குற்றவாளி என்று கூறி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அதுபோன்று இந்திய பெண்கள் வதை தடுப்பு சட்டத்தின் படியும் குற்றவாளி என்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். பிரிவு 341படி எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் ராஜேஷ் தாஸ். இதை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கியது.

தண்டனையை அனுபவிக்க வேண்டும்

ராஜேஷ் தாஸ் தன்னை காப்பாற்றிக் கொள்ள பல முயற்சிகள் எடுத்தும், இவ்வழக்கு கடந்த 2 வருடமாக மிகவும் பரபரப்பாக நடந்து வந்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. எனினும் அவர் ஜாமீன் பெற்றுள்ளார். எனவே மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உறுதி செய்து, ஏக காலத்தில் அதனை அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட எஸ்.பி.தரப்பு கோரிக்கையாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒரு அதிகாரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறை. ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

துறைமாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர மறுப்பு!

தமிழ்நாட்டிற்கு 1,000 புதிய பேருந்து வாங்க நிதி ஒதுக்கீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “பாலியல் தொல்லை : குற்றவாளியான முன்னாள் டிஜிபி – வழக்கு கடந்து வந்த பாதை!

 1. இந்த தீர்ப்பு ஏமாற்றமே! குற்றவாளியின் சூழ்நிலை சுழலும் அதன் கூட அவர் பகிர்தலையும் இன்னம் பிற ஏதேச்ச அதிகாரம் கொண்ட கவனபோக்கை அவர் கையாண்டு இருக்கலாம்..ஆனால் அப்போதும் சக அதிகாரியை மன அழுத்தம் காரணமாக பாட சொன்னார்….அவர் பாடினார்..அப்போதும் அவர் வேண்டும் என்றே அதை திரும்ப செய்தார்..மேல் கை வைத்தார்.. என…???? பாட சொன்னதையா??? புரியலங்க….வேற சார்ஜ் பஸ்டு…
  திரும்ப சார்ஜ் சீட் போட்டு…ஏதோ நடந்து….இருக்கலாம்…பெண்..அதிகாரியாக இருந்தாலும் பெண்…ஆண்..சாதாரண ரோட் டிராவலராய் இருந்தாலும் ஆண்….
  பாவம் அவர் சூழ்நிலை…அப்பாவி இல்லை….பெரிய நிலை.. தவறு தவறு செய்ய வாய்ப்பில்லை…இப்படி ஒரு கனம்..

  2) இந்த ஆள் இதே மாதிரி தான் என எங்களுக்கு தெரிந்த மேல் மட்டத்தில் ஒரு தடவை.்்்்்்்்்
  பெருசா இல்ல..

  3)தீர்ப்பில் இல்லை.. கனம் கோர்ட்டார் ம்
  சக அதிகாரிகள் பெண்ணியமும்…
  சிக்கிட்டா அரசு அளவில் தண்டனை ஆண்களுக்கே…..சந்தோசம்..

  5) இனியாவது விபசார வழக்கில் ஆண்களையும் நீதிமன்றம் முன்பு நிறுத்தி..
  புகைபடம் இல்லாத புரட்சி பன்னலாமே!..

  6)நல்ல அழகான பவரான படித்த ஆளுமை கொண்ட துனை…இனை???????????? இருந்தும்..
  ஆம்பளயாடா சார்…நீங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *