விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின என்றும், இதை தடுத்திருக்காவிட்டால் வங்கதேசம் போன்று பஞ்சாப் ஆகியிருக்கும் என்றும் பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கூறியது அம்மாநில மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில பாஜக தலைவரே கங்கனா ரனாவத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் விவசாயிகளின் போராட்டத்தையும் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன.
உள்நாட்டில் உள்ளவர்களின் உதவியுடன் நாட்டை அழிக்க வெளிச் சக்திகள் திட்டமிட்டு வருகின்றன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்” என கங்கனா ரனாவத் பேசியிருந்தார்.
இதற்கு பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த அரசியல் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கங்கனாவின் இந்த பேச்சு அம்மாநில மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி, பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தற்போது பாஜக தலைவர்களே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநில தலைவர் ஹர்ஜித் கரேவால் கூறுகையில், ”விவசாயிகளைப் பற்றிப் பேசுவது கங்கனாவின் துறை அல்ல, கங்கனாவின் அறிக்கை அவரது சொந்த கருத்து. பிரதமர் மோடியும் பாஜகவும் விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன, கங்கனாவின் அறிக்கையும் அதைத்தான் செய்கிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மதம் சார்ந்த பிரச்சனைகளில் எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதை கங்கனா தவிர்க்க வேண்டும்” என கரேவால் கூறியுள்ளார்.
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கங்கனாவின் கருத்துகள் பாஜகவுக்கு எதிரான விவசாயிகளின் சீற்றத்தை மேலும் தூண்டிவிடலாம். இது விவசாயத்தை மையமாக கொண்ட பகுதிகளில் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் தேர்தல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“நகைச்சுவையை பகைசுவையாக்காதீங்க” :ரஜினியின் பதில் – துரைமுருகன் விளக்கம்!
ரசிகர் கொலை… நடிகர் தர்ஷன் சிறையில் ஜாலியோ ஜிம்கானா! – 7 பேர் சஸ்பெண்ட்!