தமிழ்நாட்டின் இயல்பு நிலைக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவதாக அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 9 ) நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திராவிட மாடல், பெண்ணுரிமை, சுயமரியாதை, தமிழ்நாடு அமைதிப்பூங்கா, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வார்த்தைகளை அவர் வாசித்த உரையில் உச்சரிக்கவில்லை.
அதேபோல்,பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர், போன்ற தலைவர்களின் பெயரையும் தனது உரையில் வாசிக்காமல் தவிர்த்து விட்டார்.
இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ”ஏற்கனவே உரை தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டும் ஆளுநர் ரவி அரசின் உரையை முறையாக படிக்கவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே ஆளுநர் ரவி சட்டமன்றத்தை விட்டு தனது அதிகாரிகளுடன் வேகமாக வெளியேறினார்.
பின்னர், சட்டப்பேரவை விதியின் படி அரசு தயாரித்து கொடுத்த ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் முதல்வரால் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஆர்.என்.ரவியை போல் செயல்பட்ட மற்ற மாநில ஆளுநர்கள் யார் யார்?என்பதை பற்றி நாம் மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அதேபோல், தமிழகத்தைப் பொறுத்தவரை, 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டபோது பெரும் சர்ச்சை வெடித்தது.
அதற்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் தான். அவர் அரசின் 50 நிமிட உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடிக்க உடனே தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஆளுநரின் ஆங்கில உரை முடிந்த பிறகு தமிழில் சபாநாயகர் உரையை வாசிப்பது வழக்கம். ஆனால், அப்போது ஆளுநரின் ஆங்கில உரைக்கு பிறகு தமிழில் உரை நிகழ்த்தப்படவில்லை.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதற்கு பதிலளித்த சபாநாயகர் கே.காளிமுத்து, ஆளுநர் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
அதேபோல், ஜூன் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை மட்டுமே பேசினார்.
அவர் பேசி முடித்த பிறகு முழு உரையையும் சபாநாயகர் டி.ஜெயக்குமார் தமிழில் வாசித்தார்.
அப்போது, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஏன் அரசு வழங்கிய முழு உரையையும் வாசிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த பர்னாலா நான் அரசின் உரையை முழுமையாக வாசிக்காததிற்கு என் உடல்நிலையே காரணம் என்று விளக்கம் கொடுத்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நான் கொலை செய்து விட்டேன்: வைரலாகும் ராகுல் காந்தியின் பேச்சு!
சேலை அணிந்து உடற்பயிற்சி: வைரலாகும் வீடியோ!