முகமது நபிக்கு எதிராக சர்ச்சையாக பேசிய பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஒன்பது எஃப்ஐஆர்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் நுபுர்.
நுபுர் சர்மாவின் மனு மீதான விசாரணை இன்று ( ஜூலை 19 ) உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் ஜேபி பர்திவாலா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும் வரை நுபுர் சர்மாவை கைது செய்வதை தவிர்க்குமாறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் ஜேபி பர்திவாலா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே விவகாரமாக கருதி விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் ( ஆகஸ்ட் 10 ) ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீதிபதிகள், “முந்தைய உத்தரவை சிறிய அளவில் சரி செய்கிறோம். நீங்கள் ஒவ்வொரு நீதிமன்றமாக செல்வதை நாங்களும் விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.
மேலும், நுபுர் சர்மாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரும் மனுவுக்கு மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, ( ஜூலை 1 ) ஆம் தேதி நடந்த விசாரணையின்போது நுபுருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை நீக்கும்படி அவரது வழக்கறிஞர் மணீந்தர் சிங் கோரிக்கை விடுத்தார். நுபுருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தன்னுடைய உயிருக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நுபுர் சர்மா தரப்பில் கூறப்பட்டது. அப்போது நடந்த விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், முகமது நபி குறித்து தொலைக்காட்சியில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவர் மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனுவை ஏற்க முடியாது. மேலும், நுபுர் சர்மாவின் கருத்து துரதிருஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்-