அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு… அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!

Published On:

| By Kavi

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று கூறியிருந்தார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் அம்பேத்கரை கொள்கை தலைவராக பின்பற்றுவதாக கூறும் தவெக தலைவர் விஜய் அமித்ஷாவின் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று அரசியல் அரங்கில் கேள்வி எழுந்தது.

விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

அதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் அதிமுகவோ பாமக தலைவர் அன்புமணியோ பங்கேற்கவில்லை.

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டிக்ககூடவில்லை.

அது கூட போகட்டும், கடந்த டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நூலை வெளியிட்ட தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜய் இதுவரை அமித்ஷாவை கண்டிக்கவில்லை.
எல்லோரும் அமித்ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் தவெக தலைவர் விஜய், ”யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவரும் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு – மோடியை சந்தித்த ராகுல் : ஏன்?

ஒரே நாடு ஒரே புயல் : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share