Controversial Chandigarh Mayor Election

சர்ச்சையான சண்டிகர் மேயர் தேர்தல் : நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல்!

அரசியல் இந்தியா

சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நாளை (ஜனவரி 31) விசாரணைக்கு வருகிறது.

நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தல், இந்தியா கூட்டணிக்குள் நிலவும் பூசல் ஆகியவற்றுக்கு இடையே இன்று நடைபெற்ற சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்டன.

பாஜக சார்பில் மேயர் பதவிக்கு மனோஜ் சோன்கர் மற்றும் துணை மேயர் பதவிக்கு ராஜிந்தர் குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தியா கூட்டணியின் சார்பில் மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் சிங்கும், துணை மேயர் பதவிக்கு காங்கிரஸை சேர்ந்த நிர்மலா தேவியும் போட்டியிட்டனர்.

சண்டீகர் மேயர் தேர்தல் தலைமை அதிகாரியாக முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவின் உறுப்பினரான அனில் மசிஹ் செயல்பட்டார்.

பாஜக வேட்பாளர் வெற்றி!

இந்த நிலையில் முதலில் மேயர் பதவிக்கு வாக்கு நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சண்டிகர் மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 வயதான சோன்கர் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவர் மதுபான வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு மொத்தம் 20 வாக்குகள் பதிவான நிலையில், தேர்தல் தலைமை அதிகாரியாக செயல்பட்ட அனில் மசிஹ் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவித்தார். இதனால் குல்தீப் சிங் வெறும் 12 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

இதனையடுத்து சோன்கரை மேயர் நாற்காலியில் உட்காரவைத்து பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பிய நிலையில், தோல்வியடைந்தார் என அறிவிக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் அங்கேயே தேம்பி அழுதார்.

இதற்கிடையே தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் இந்தியா கூட்டணியின் வாக்குகளை எண்ணும்போது மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

மேலும், “சண்டிகர் மேயர் தேர்தல் தலைமை அதிகாரி அனில் மசிஹ் பாஜகவை சேர்ந்தவர். நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டு மேயர் தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்துள்ளார். இதன்மூலம் அவர் தேசத்துரோகம்  இழைத்துள்ளனர். மோசடி வழக்கில் மசிஹ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று  ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாளை விசாரணை!

சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் பாஜக அரசுக்கு எதிராக கடும் குற்றசாட்டை எழுப்பி வருகின்றனர்.

மேலும் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நாளை (ஜனவரி 31) விசாரணைக்கு வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே மேயர் தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தால் துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க மறுத்து இந்திய கூட்டணியின் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பாஜக வேட்பாளர் ராஜிந்தர் குமார் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நெல்லை மாநகராட்சி கூட்டம்: மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கோஷம்!

மிஷ்கின் இசையில் வெளியானது ’டெவில்’ பாடல் வீடியோ!

தங்கலானுக்கு பிறகு பா.ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்!

 

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *