கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் எடப்பாடியின் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கமும் இன்று (செப்டம்பர் 18) சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008-10ம் ஆண்டு கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா மீது அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்திடம், 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எடியூரப்பா மீது வழக்கு!
இதுதொடர்பான வழக்கில் மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம், ”எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
வரும் நவம்பர் 2ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்” என லோக் ஆயுக்தா போலீஸாருக்கு கடந்த 14ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, எடியூரப்பா, அவரது இளைய மகன் விஜயேந்திரா, பேரன் சசிதர் மரடி, மருமகன்கள் சஞ்சய் ஸ்ரீ, விருபாக் ஷப்பா யமகனமரடி, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பிரகாஷ், ரவி ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
ஊழல் வழக்கில் எடப்பாடி சம்பந்தி!
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம் முக்கிய குற்றவாளியாக இன்று சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் மனைவி வழியிலான உறவினர் ஆவார்.
பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு 666.22 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்க, அதன் தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் ரூ. 12 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் முக்கிய அரசு ஒப்பந்ததாரராக உள்ள ராமலிங்கம், தனக்கு தொடர்புடைய 7 நிறுவனங்கள் மூலம் லஞ்ச பணம் கைமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
காட்டி கொடுத்த தொலைபேசி உரையாடல்!
லஞ்சம், பேரம் தொடர்பாக ராமலிங்கமும், எடியூரப்பாவின் பேரன் சசிதரன் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது.
அதில் எடியூரப்பாவின் மகனும், பாஜக மாநில துணைத் தலைவருமான விஜயேந்திராவுக்கு பணம் சென்று சேராதது தொடர்பான உரையாடல் பதிவாகி இருந்தது.
ஏற்கனவே தரப்பட்ட புகார் மற்றும் தொலைபேசி உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது ஒப்பந்ததாரர் ராமலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் முக்கிய அரசு ஒப்பந்ததாரராக உள்ள ராமலிங்கம் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டிலும் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை தற்கொலை… சிக்கிய கடிதம்: சென்னையில் பரபரப்பு!
கூடா நட்பு