தொடர் மழை: வடிந்தும் வடியாத சென்னை!

அரசியல்

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, சென்னை அமைச்சர்கள் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி என்று கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து களமிறங்கிக் கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

பொறுப்பில் இருப்பவர்களின் தொடர் கண்காணிப்பும் அதை செயல்படுத்தியவர்களின் உழைப்பும் நேற்று இரவு முதல் பெய்த கன மழைக்குப் பிறகான இன்று காலை வேளையில் சென்னை வாசிகளுக்கு தெரிந்தது.

ஆம்… சென்னையில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் தொடர் கன மழை பெய்த நிலையிலும் இன்று (நவம்பர் 1) காலை மழை நீர் தேங்கும் என ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பல சாலைகளும், சப் வேக்களும் துடைத்து வைத்தது மாதிரி மழை நீர் வடிந்திருந்தன.

இதையடுத்து சமூக தளங்களில் பலர், ‘எங்கள் ஏரியாவில் இவ்வளவு மழை நீர் பெய்தும் சொட்டு நீர் தேங்கவில்லை’ என்று ஆச்சரிய போஸ்டுகளை வெளியிட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் மழைநீர் உடனுக்குடன் வடிந்துகொண்டிருப்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.

பாண்டி பஜார் எப்போதுமே மழைக் காலத்தில் சாலை மூழ்கிப் போயிருப்பதன் பரிதாப சாட்சியாக இருக்கும்.

ஆனால் இன்று (நவம்பர் 1) காலை 9.20க்கு பாண்டி பஜார் சாலையில் துளி கூட மழை நீர் தேங்காததை வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார் சங்கீதா கந்தவேல்.

அதேபோல சென்னை கொளத்தூர் எழுபது அடி ரோடு கடந்த மழைக் காலத்தில் கடுமையான நீர்த் தேக்கத்தால் மூழ்கிப் போனது.

ஆனால் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தும், வடிகால் கட்டுமானங்களால் மழை நீர் தேங்காமல் இருப்பதை பத்திரிகையாளர் அஸ்வின் வீடியோ பதிவிட்டுள்ளார்.

மேஜர் டாக்டர் ப்ரவீன் ப்ரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசோக் நகர், மாம்பலம் பகுதிகளில் குறிப்பாக போஸ்டல் காலனி பகுதிகளில் மழை நீர் தேக்கமே இல்லை. சென்னை மாநகராட்சியின் சிறந்த பணிகளுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல சென்னை மாநகராட்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் மழை நீர் வடிகால் வசதிகள் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் சென்னையின் முக்கியமான சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேக்கத்தை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களில் இருந்து படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜோன்ஸ் ரோடு சப்வே, வில்லிவாக்கம் சப்வே, கெங்குரெட்டி சப்வே, மாணிக்கம் நகர் சப்வே போன்ற சுரங்கப் பாதைகளில் இன்று காலை 7 மணிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி.

விடிய விடிய மழை பெய்தும் இந்த சப்வேக்களில் மழை நீர் தேங்கவில்லை என்பதை ஆறுதல் மட்டுமல்ல பெரும் மாறுதலும் கூட.’

பொதுமக்களிடம் இருந்து சமூக தளங்களில் குவிந்த பாராட்டுகளுக்கு பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி,

“பொதுமக்களின் பாராட்டுக்கு நன்றிகள். இந்த பாராட்டுகள் அனைத்தும் மாநகராட்சி அலுவலர்களையும் ஊழியர்களையுமே சேரும். அவர்கள்தான் கடுமையாக உழைத்து மழையின் தாக்கத்தை பெருமளவு குறைத்திருக்கிறார்கள். ஏதேனும் குறைகள் இருந்தாலும் தெரிவியுங்கள். எங்காவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் எங்களை அலர்ட் செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறது.

விடிய விடிய மழை பெய்தும் இப்படி மழை நீர் தேங்காத இடங்கள் இருந்தாலும் மழை நீர் தேங்கிக் கிடக்கும் இடங்களும் சென்னையில் நிறைய இருக்கின்றன.

சென்னை ஜிபி சாலையில் விடிய விடிய பெய்த மழையால் சாலை முழுதும் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறது. எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனை அமைந்துள்ள சாலையிலும் மருத்துவமனை வளாகத்திலும் மழை நீர் தேங்கியிருக்கிறது.

இதை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதேபோல 150க்கும் மேற்பட்ட சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மழைக் காலம் தொடங்கும் நவம்பர் முதல் வாரத்தில்தான் சென்னை பலத்த நெருக்கடிகளை சந்திக்கிறது. சென்னை மக்கள் மழை நீரால் நெருக்கடியை சந்திக்கிறார்கள் என்றால், அரசும் அரசு நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நெருக்கடிகளை சந்திக்கும்.

ஆனால் இந்த வருடம் சென்னை மாநகரில் கடந்த ஆறேழு மாதங்களாக தீவிரமாக நடந்துவந்த மழை நீர் வடிகால் பணிகள் ஓரளவு பலன் அளித்திருப்பதாகவே தெரிகிறது.

அடுத்தடுத்த கன மழையையும் சென்னை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளோ, ‘ எடுத்த எடுப்பிலேயே பெரிய அளவு விமர்சனங்கள் எழவில்லை என்பதே ஒரு சாதனைதான். மழை நீர் வடிகால் பணிகளை தீவிரமாக செய்துகொண்டிருக்கிறோம்” என்கிறார்கள்.

சென்னை மழை தொடர்கிறது. சென்னை மாநகராட்சிப் பணிகளும் தொடர்கிறது.

-வேந்தன்

நகர, மாநகர சபை கூட்டங்கள்: முதல்வர் பங்கேற்காதது ஏன்?

இரங்கலுக்கு பதில் நன்றி: அண்ணாமலை விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *