வைஃபை ஆன் செய்ததும் தமிழகத்தில் பரவலாக நடக்கும் ஐடி சோதனைகள் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் வருமான வரி சோதனைகளில் திமுக, அதிமுக இருதரப்பினரும் குறி வைக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி நடத்தப்பட்ட ரெய்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஆர். எஸ். முருகன் தொடர்பான இடங்களில் ரெய்டு, சேலத்தில் அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் ரெய்டு, திருப்பூரில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு, ஈரோட்டில் கட்டுமான தொழில் செய்பவர் வீட்டில் ரெய்டு என்று இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடந்திருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’இந்த தேர்தலுக்குப் பிறகு திமுக அகற்றப்பட்டு விடும்’ என்று கடுமையாக விமர்சித்தார். அன்று பிரதமர் தனது க்ரீன் ரூமில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோடு சுமார் 20 நிமிடங்கள் உரையாடியிருந்தார்,
அப்போது தமிழ்நாடு நிலவரம் பற்றி பிரதமரிடம் விவரித்த அண்ணாமலை, ’தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் இரு கட்சிகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை தேர்தல் பட்ஜெட்டாக செலவு செய்ய தயாராகி விட்டார்கள். வேட்பாளர்களுக்கான செலவு, வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் என்ற வகையில் திமுக, அதிமுக இரு தரப்பும் மிகப்பெரிய பணபலம் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து இன்றைய நிலையில் பாஜக வெற்றி பெறுவது கடினம். அவர்கள் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினால் ஒரு சில சதவிகிதங்கள் நமக்கு சாதகமாக உயர வாய்ப்புண்டு’ என்று தெரிவித்திருக்கிறார்.
இதன் அடிப்படையில்தான் அப்போதே தமிழகத்தில் தேர்தல் செலவுக்காக திமுகவும் அதிமுகவும் எவ்வாறு கரன்சி பரிமாற்றம் செய்கிறார்கள் என்பது பற்றி உளவுத்துறையும் வருமான வரி புலனாய்வுத் துறையும் தீவிர கண்காணிப்பில் இறங்கின. அப்போது இருதரப்பிலும் அரசு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சில துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மூலமாக நிதி நகர்த்தப்படுகிறது என்று ரிப்போர்ட் டெல்லிக்குப் பறந்தது.
இந்த நிலையில்தான் வேட்பு மனு தாக்கல், பரிசீலனை எல்லாம் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி… தேர்தலுக்கான செலவுகள் தொடங்கும் காலம் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கியது. சரியான சந்தப்பத்துக்காக காத்திருந்த வருமான வரித்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தொடர்புடையவர்களை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக என இரு தரப்பையும் குறிவைத்து இந்த ரெய்டு நடந்து வருகிறது.
இதே போல 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுமார் 11 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வருமான வரித் துறையின் புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பத்து நாட்களில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகமாக நடைபெறுவதால் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கும் உரிமையில் அதிக தலையீடு இருக்கிறது. எனவே வேலூர் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் ஏப்ரல் 14 ஆம் தேதி அனுமதி கோரியது. ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்க இருந்த நிலையில் 2019 ஏப்ரல் 16ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதே போன்ற ஃபார்முலாவை இப்போது பயன்படுத்தி திமுக, அதிமுக ஆகியவற்றின் கரன்சி புழக்கத்தை முடக்கவும், கணக்கில் வராத மிக அதிக பணம் கைப்பற்றப்படும் பட்சத்தில் அதை அமலாக்கத்துறைக்கு மாற்றவும், அதன் மூலம் சில தொகுதிகளில் தேர்தலை கூட நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஐடி ரெய்டுகள் நடந்து வருகின்றன. இந்த ரெய்டு தேர்தல் வரை தொடரும் என்கிறார்கள் ஐடி வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
“அதிமுகவை அழிக்க நினைத்தால் இந்த நிலைமைதான்” : ஓபிஎஸ் பெயரை சொல்லாமல் பேசிய ஈபிஎஸ்
“திமுகவால் முடியுமா என கேட்டவர்களுக்கான பதில்”: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஸ்டாலின் வரவேற்பு!