டிஜிட்டல் திண்ணை: போட்டி உறுதி… ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக ஆதரிக்கும்- ஓபிஎஸ் வைக்கும் செக்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் ஜனவரி 23 ஆம் தேதி இரவு நடத்திய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வந்து விழுந்தன.

அந்தப் படங்களை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுகவுக்குள் எடப்பாடிக்கும் பன்னீருக்குமான புயல் வேகமாக வீசத் தொடங்கியிருக்கிறது. இத்தொகுதியில் அதிமுகவின் விருப்பத்துக்கு இணங்க  தமாகா போட்டியிடவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்ததை அடுத்து, ஈரோடு கிழக்கில் வேட்பாளர் தேர்வை தொடங்கிவிட்டார் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும் அதிரடியாக ஜனவரி 23 ஆம் தேதியில்  இருந்து அதிமுகவின் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு செய்யலாம் என்றும் அறிவித்தார் எடப்பாடி.  அதேநேரம், ‘நாங்கள்தான் அதிமுக. இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவோம்’ என்று அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், ‘ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் போட்டியிட மாட்டோம்’ என்றும் அறிவித்தார்.

இதையடுத்து ஜனவரி 21 ஆம் தேதி எடப்பாடி, பன்னீர் ஆகிய இரு தரப்பினரும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கேட்டனர். 

இந்த நிலையில்தான் ஏற்கனவே திட்டமிட்ட பொங்கல் நிகழ்ச்சிக்காக ஜனவரி 22 ஆம் தேதி குஜராத் புறப்பட்டுச் சென்றார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அவர் பாஜக மேலிடப் பிரமுகர்களுடன் ஆலோசனை செய்வார் என்று கூறப்பட்டது. குஜராத்தில் இருந்து சென்னை திரும்பி வந்த ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அப்செட்டாகவே இருக்கிறார் என்றே தகவல்கள் வந்தன.

இந்த பின்னணியில்தான் ஜனவரி 23 ஆம் தேதி எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மாலை  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார். ஒவ்வொருவருக்கும் ஐடி கார்டு தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் செல்போனை வெளியே வைத்து விட்டு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. கூட்டம் மாலை 7 மணியளவில் தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைபெற்றது கூட்டம்.

87 மாவட்டச் செயலாளர்கள்,  தலைமைக் கழக நிர்வாகிகள் 114 பேர் என  சுமார் 200 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்,   வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர்,  மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மேடையில் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராய் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிப் பேசிய அவர்கள், ‘ அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தனது சொந்த நலனுக்காக எடப்பாடி கட்சி நலனை கெடுக்கிறார். இதை இதுவரை உணர்ந்து கொள்ளாதவர்களும் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் உணர்ந்து கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டனர். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி ஓ. பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, ‘அண்ணா காலத்தில் நான் தேர்தலில் நின்ற போது எல்லா செலவுகளும் சேர்த்து 2000 ரூபாய் தான் ஆனது. ஆனால் இப்போது ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் அதற்கு மேல் என்று கொடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பழனிச்சாமி பணத்தை நம்பிக் கொண்டிருக்கிறார். அந்தப் பணம் எப்போதும் கூட வராது. தொண்டர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிமுக சட்ட விதிகளின்படி எம்ஜிஆர் வகுத்து தந்த விதிகளின்படி இரட்டை இலை சின்னம் நமக்கே கிடைக்கும்’ என்று கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது, ‘அதிமுகவின் தற்போதைய அதிகாரபூர்வ நிலவரப்படி சட்ட விதிகளின்படி நடந்த தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவருக்கு பதிலாக நான் வேறு இணை ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து விட்டேன். ஆக நான் மட்டும்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். எனவே அதிமுக என்பது நாம் தான். நாம் தேர்தலில் போட்டியிடப் போவது உறுதி. நீங்கள் அனைவரும் சென்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேலைகளை தொடங்குங்கள். அன்றும் சொன்னேன்… இரட்டை இலை முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன். இப்போதும் அதையே சொல்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தான் அவர்கள் ஆதரவு தருவார்கள். அதிமுகவின் ஓர் அணியை மட்டுமே அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் போன்றவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதை நீங்கள் பார்த்தீர்கள். பிளவு ஏற்படுத்த முயல்பவர்களோடு எப்படி ஒரு கூட்டணியை ஏற்படுத்த முடியும்? நமது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு நான் இனி அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன். தைரியமாக செல்லுங்கள். நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். இரட்டை இலை நமக்கே கிடைக்கும்’ என்று வழக்கத்தை மீறிய ஆவேசத்தோடு பேசி இருக்கிறார் பன்னீர்செல்வம்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share