முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
‘பிரிட்டன் ஆங்கிலேயர்களுக்கே’ என்ற குரலுடன் இரு அரசியல் கட்சிகள் பிரிட்டனில் வலம் வருகின்றன: ஒன்று, யுகிப் (UKIP) என்றழைக்கப்படும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திரக் கட்சி. மற்றொன்று, பிரிட்டன் தேசியக் கட்சி என்றறியப்படும் பிஎன்பி (BNP).
முற்போக்குவாதிகளும் இடதுசாரி ஊடகங்கள் அறிவுஜீவிகள் இந்தக் கட்சிகளினால் ஏற்படக்கூடிய, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற நச்சு விளைவுகளை தொடர்ந்து ஊடகங்களின் மூலம் முன் வைக்கின்றனர். இருந்தாலும் பிரிட்டனில் உள்ள ஒரு பகுதியினர் இக்கட்சிகளுக்கு தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இக்கட்சிகள் பிரிட்டனின் பாரம்பரியப் பெருமைகளில் ஒன்றாகக் காலனியத்தை முன் வகிக்கிறது. இப்படிப்பட்ட கட்சிகள் காலனியத்தை ஆதரிப்பது பன்மைத்தன்மை வாய்ந்த பிரிட்டனின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை படைத்தது என இடதுசாரி அறிவுஜீவிகள் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எடுத்துக் கூறியவண்ணம் உள்ளனர். ஆனாலும் பிரிட்டனின் வலதுசாரிக் கட்சிகளுக்கான ஆதரவு பல்கலைக்கழகங்களிலும், சமூக மற்றும் வரலாற்று ஆய்வுக்கூடங்களிலிருந்தும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதும் உண்மையாகும். இன்னும் சொல்லப்போனால் இவ்வகையான ஆய்வுக்கூடங்கள் உற்பத்தி செய்யும் ‘கண்டுபிடிப்புகளே’ வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கிற்கு உரம் சேர்க்கின்றன.
போன ஆண்டு ‘மூன்றாம் உலக நாடு’ என்ற காலாண்டு ஆய்விதழில் (Third World Quarterly) செப்டம்பர் மாதத்திய இதழிலில் போர்ட்லாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப்ரூஸ் கில்லி காலனியத்தினால் விளையக்கூடிய நல்விளைவுகள் பற்றி வக்காலத்து வாங்கும் வண்ணம் ‘The Case for Colonialism’ என்ற ஒரு கட்டுரையைப் பதிப்பித்தார். இக்கட்டுரை எழுப்பிய விவாதங்களுக்குச் செல்லும் முன்னர் கில்லியின் வாதங்களைப் பார்க்கலாம்.
காலனியத்தின் பங்களிப்பு என்ன?
கடந்த நூறாண்டுகளாக காலனியம் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகவே இருந்து வருகிறது. இது காலனியத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பெரிதுபடுத்துவதாக இருக்கிறது. இப்படி ஒருதலைப்பட்சமாக, பழங்கொடுங்கதையாகக் காலனியத்தை அணுகாமல் திறந்த மனதுடன் ஒரு அரசியல் அறிவுப் பொருளாக அங்கீகரித்து உரையாட வேண்டும் என்று கில்லி தனது கட்டுரையைத் தொடங்குகிறார்.
காலனியத்தின் விளைவுகளை மதிப்பிட வேண்டுமெனில், அவற்றின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளையும் கணக்கிலெடுக்கவேண்டும் என கில்லி வாதிடுகிறார். அதாவது காலனியத்தினால் பயனடைந்த அரசுகள்; அவற்றின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட மக்களின், அவர்களின் சந்ததியினரின் ஒட்டுமொத்த வாழ்வு நிலைகள் என அனைத்தையும் பார்க்க வேண்டும். காலனிய நாடுகளின் தற்போதைய அரசாங்கத்தின் இயல்புகள், அவற்றின் ஜனநாயகப் பண்புகள், மற்றும் சந்தைப் பொருளாதார ஜனநாயகப் பண்பினால் உலக அரசியலில் பங்கெடுத்துப் பொருளாதார மானுட வளத்திற்கு உரம் சேர்ப்பது என அனைத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இந்தியா தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஜனநாயகக் கூறுகள், சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் (சிங்கப்பூர்), வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, பெண்களுக்கு சம உரிமை வழங்குதல் போன்ற சமூக மாற்றங்களை எல்லாம் காலனியக் கொடைகளாகவே கில்லி பார்க்கிறார்.
கில்லியைப் பொறுத்தவரை நல்லதிகாரம் (good governance) என்பது அனுபவமற்ற, திறனற்ற வளரும் நாடுகளுக்கு – அதாவது ‘மூன்றாம்’ உலக நாடுகளுக்கு – ஏற்புடையதல்ல. அந்நாடுகளுக்குக் காலனிய அதிகாரமுறை (Colonial governance) பலனளிக்கக்கூடியது என சிங்கப்பூரை உதாரணம் காட்டுகிறார். சிங்கப்பூரில் ஜனநாயகம் குறைவு. பதிலாக சிங்கப்பூர் அரசாங்கம், சந்தை உற்பத்தியைக் கவனிக்கும் ஒரு தலைமை நிர்வாகியாக உருமாறிவிட்டிருக்கிறது. இந்த முறையில் குடிமக்கள் – அரசு என்ற உறவு (குறைந்து) போய் வேலையாள் – எஜமான் என்ற உற்பத்தி உறவு நிலையே சமூகத்தில் மிஞ்சுகிறது. இந்த மாடலைத்தான் நம்மூரில் உள்ள மிஸ்டர் ஆன்மிக அரசியல் விரும்புகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்க.
காலனிய நாடுகள் ஒரு வேளை காலனிய ஆதிக்கம் நடைபெறாமல் இருந்திருந்தால் அவர்கள் இப்போதைய நிலைமைக்கு வந்திருக்க முடியுமா என்றும் கில்லி கேள்வியெழுப்புகிறார். அதாவது சிங்கப்பூர், போட்ஸ்வானா, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகள் காலனிய ஆதிக்கமின்றி இன்றைய ஆட்சிமுறை, வளர்ச்சியை அடைந்திருக்காது என்பது கில்லியினுடைய வாதம். நெடிய காலனிய வரலாறுகள் இல்லாத நாடுகளான சீனா (ஜனநாயகத்தன்மையின்மை), எத்தியோப்பியா (பஞ்சம், ஊழல்), லைபிரீயா (அரசியல் ஸ்திரமற்றதன்மை, மதவாதம், ஊழல்), சவுதி அரேபியா (மதவாதம், மனித உரிமை), ஹைதி (ஊழல் அரசு), குவாத்மலா (வன்முறை) போன்ற நாடுகளில் உள்ள தற்போதைய அரசியல் மக்கள் சூழ்நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் காலனிய வரலாற்றின் பாதிப்புள்ள இந்தியா போன்ற நாடுகளின் குடிமக்கள் பத்திரமாகவே உள்ளனர் என கில்லி தனது வாதங்களை முன் வைக்கிறார்.
அது மட்டுமல்ல. நவ பொருளாதாரம், உலகமயமாக்கல் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் காலனிய (நற்)குணாதியசங்களின் விரிவாக்கமே என்ற கருத்தை முன்வைக்கிறார். உதாரணமாக, 1990களிலும் 2000களிலும் உலக வங்கி லைபீரியா மற்றும் சாட் நாட்டிற்கு நிதியுதவி வழங்கியபோது ஒரு நிபந்தனை விதித்தது. பெரும் செலவினம் கொண்ட அரசாங்கத் திட்டங்களை வங்கியின் அனுமதிக் கையொப்பமின்றி நிதியைப் பெற முடியாது என்பதே அதுவாகும். பிரிட்டனுக்குக் கீழ் இந்தியா இருந்தபோது அதிக பொருட்செலவுள்ள பொதுக் கொள்கைகளின் விதியெல்லாம் லண்டனில்தான் தீர்மானிக்கப்படும். ஆஸ்திரேலியா தனது பக்கத்து தீவு நாடான சாலமோன் தீவுகளுக்கு உதவி செய்யும்போது இம்மாதிரியான நிபந்தனைகளைத் தொடர்ந்து விதித்துவருகிறது. எனவே, காலனியம் தொடர்ந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு நன்மை பயக்கும் கூறுகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது என்றும், தற்போதைய பன்னாட்டு அரசியலின் பொருளாதார உறவுகளைச் செம்மைப்படுத்தக் காலனியத்தின் கூறுகள் உதவுகின்றன எனவும் கில்லி வாதிடுகிறார். காலனியத்தின் நற்கூறுகளுக்கு மீண்டும் அங்கீகாரம் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் (the claim for recolonization) என கில்லி வாதிடுகிறார்.
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த (2016) பால் ரோமர், வளரும் நாடுகள் தங்களது நிலங்களின் கணிசமான பகுதிகளை வளர்ந்த நாடுகளுக்கு 99 ஆண்டுகளுக்கு ‘ஒத்தி’க்கு கொடுக்கலாம் என ஒரு ‘அபாரமான’ யோசனை தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி போல வாடகை நகரங்களை (chartered cities) உருவாக்கலாம் எனவும், அப்படிப்பட்ட நகரங்கள் அல்லது தனி எல்கைகள் மேற்குலகின் நிர்வாகத்திறனினால் மிளிரும்போது அவற்றின் எச்சங்கள் வாழ்வாதாரம் குறைந்த மற்ற பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு இருப்பதாக ரோமர் குறிப்பிட்டதை கில்லியும் ஆதரித்து வாதிடுகிறார். ஹாங்காக், ஏறத்தாழ இப்படிப்பட்ட மாடலில் உருவாகியதுதான். இப்படிப்பட்ட சுரண்டல் கொள்கைகள் இன்றளவும் நடப்பில் இருப்பதுதான் மிகப் பெரிய சோகம்.
தென்கொரியாவின் வர்த்தக நிறுவனமான டவூ (Daewoo), மடகாஸ்கர் நாட்டில் உள்ள மொத்த விளைநிலங்களில் பாதிக்கு மேல் – கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ஹெக்டேர் – 99 வருட ஒத்திக்கு எடுத்துள்ளது. மடகாஸ்கரின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கும் அதன் விளைவாக முடுக்கிவிடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளுக்கும் இந்த வியாபார ஒப்பந்தமே காரணமாகும். அதே சமயத்தில் சுற்றுப்புறச் சூழல் அபாயத்தினால் மொரிஷியஸ் தீவு கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் புதைவதை அனைவரும் அறிவோம். மொரிஷியஸ் அரசாங்கம் தனது மக்களின் எதிர்கால வாழ்வாதாரத் தேவைக்காக நிலப்பகுதியை வாங்க அல்லது ஒத்திக்கு எடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் விருப்பம் தெரிவித்தபோது, ஆஸ்திரேலியா முற்றிலுமாக மறுத்துவிட்டது.
எதிர்வினைகளும் நடவடிக்கைகளும்
கில்லியின் கட்டுரை பல்கலைக்கழக வளாகங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் இந்த ஆய்வு இதழின் பெயரிலிருந்து ஆரம்பிக்கலாம். மூன்றாம், இரண்டாம், முதலாம் உலக நாடுகள் என்ற படி வரிசைக்கிரமாக நாடுகளை அழைப்பது எல்லாம் வழக்கொழிந்து பல பத்தாண்டுகளாகின்றன. ஆனால் மனித குல மேம்பாட்டுக்காகச் சிந்திக்கும் பல்கலைக்கழக இதழ்கள் இன்னமும் காலனிய உலகத்திலிருந்து வெளிவர இயலாமல் அங்கேயே உழன்றுகொண்டு இருக்கின்றன.
இம்மாதிரியான இதழ்களில் வரும் ஆய்வுக் கட்டுரைகளை அத்துறையில் பாண்டித்தியம் பெற்ற இரண்டு பெயர் தெரியாத பேராசிரியர்கள் முதலில் படித்து மதிப்பாய்வு செய்வது வழக்கம். அதனடிப்படையில் இந்தக் கட்டுரையில் உள்ள அடிப்படையான கோளாறுகளை யாரும் சுட்டிக் காட்டவில்லை என்பதைப் பார்க்கும்போது ஒருவேளை மதிப்பாய்வு செய்த இரண்டு பேராசிரியர்களும் காலனியத்தின் அடிப்பொடிகளோ என்று அய்யம் கொள்ள நேர்கிறது.
இச்சூழ்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள இறையியல் துறை பேராசிரியரும் காலனிய ரசிகருமான நைஜல் பிக்கர் கில்லிக்கு ஆதரவு தெரிவித்து ஒரு [கட்டுரை](https://www.thetimes.co.uk/article/don-t-feel-guilty-about-our-colonial-history-ghvstdhmj) எழுதினார். காலனியம் குறித்து நாம் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை எனவும், காலனியம் நல்லதும் செய்திருக்கிறது எனவும் அவர் வாதிட்டார். ஆங்கிலிக்கன் சர்ச்சின் பாதிரியார் நைஜல் காலனியத்துவத்திற்கு ஆதரவாகவே தனது கருத்துக்களை எப்போதும் வெளியிட்டுள்ளார்.
நைஜலின் கட்டுரை வெளிவந்ததை அடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் உள்ள ஆப்பிரிக்கா சொசைட்டி கில்லி மற்றும் நைஜலின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன அறிக்கையை வெளியிட்டது. மேலும் கில்லியின் கட்டுரையை மூன்றாம் உலக நாடுகளுக்கான காலாண்டு ஆய்விதழ் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. பின்காலனியத்துவக் கல்வியாளர்கள், கில்லி மற்றும் நைஜலுக்கு எதிராகத் திறந்த மடல் ஒன்றை எழுதினர்.
பிரச்சினை பெரிதாகவே ஆய்விதழின் கௌரவப் பொறுப்பில் இருந்த இதழின் ஆசிரியர்கள் பதவி விலகல் செய்தனர். பிரிட்டன் பத்திரிக்கைகளில் நைஜலும் கில்லியும் கவனம் பெற்றனர். இறுதியில் இப்போராட்டத்தின் கடைசி வடிவமாக அக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டு இணையத்தில் இருந்து இறக்கப்பட்டது. ஆனால் இங்கே தான் ஒரு சின்ன ட்விஸ்ட்! திரும்பப் பெறுவதற்கு அந்த ஆய்விதழ் சொன்ன காரணம்: கில்லியின் கட்டுரை பலத்த விமரிசனங்களையும் விவாதங்களையும் எழுப்பியது. அதே சமயத்தில் அக்கட்டுரைக்குப் பின்னர் இதழின் ஆசிரியருக்கு தனிப்பட்ட முறையில் அபாயகராமான மிரட்டலும் வந்தது. டைய்லர் அன் ஃப்ரான்சிஸ் பதிப்பகக் குழுமத்தில் வேலைபார்க்கும் சக ஊழியரின் பாதுகாப்பினை மனதில் வைத்து இக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்த ஆய்விதழின் வலைப்பக்கம் தெரிவிக்கிறது.
பொது அரசியலில் உள்ள வலதுசாரி அரசியல்வாதிகள்கூட அவ்வப்போது ஓட்டரசியல் கருதி நாசூக்காகப் பேச வேண்டும் என ஒரு நிபந்தனை உண்டு. ஆனால் பல்கலைக்கழக அறிவு ஜீவிகளுக்கு அப்படிப்பட்ட நிபந்தனை எதுவும் இருப்பதாக இந்த சம்பவத்தின் மூலம் தெரியவில்லை. வரும் வாரம், இவர்களுக்கு பதில் சொல்லும் மாற்றுத் தரப்பினரைப் பற்றிப் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன், (https://mobile.twitter.com/muralisvelan) ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]