பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்!

அரசியல்

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா இன்று (டிசம்பர் 22) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்டகாலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 1967ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவானது இந்த பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது.

அதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இம்மசோதா கடந்த டிசம்பர் 15ஆம் தேதி மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில் ’பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மக்களவையில் நிறைவேறிய மசோதா’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், இம்மசோதா மாநிலங்களவையிலும் இன்று (டிசம்பர் 22) ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகி, அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் – குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

பன்னீர் பண்ருட்டியார் வெட்டிய குழியில் விழுந்தாரா எடப்பாடி?

அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *