தமிழகத்தில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா இன்று (டிசம்பர் 15) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்டகாலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், 1967 ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவானது இந்த பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்து. இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது.
அதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இம்மசோதா இன்று (டிசம்பர் 15) மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா, மாநிலங்களவை ஒப்புதலைப் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகி, அரசாணை வெளியிடப்படும். முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் (அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க.) இந்த மசோதாவுக்கு நேற்றே ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் – குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
முத்து வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர்: சந்தோஷத்தில் ராஜமெளலி
முதல் டெஸ்ட்: குல்தீப் சுழலில் சிக்கிய வங்கதேசம்