அரசமைப்புச் சட்டமும் மனு ஸ்மிருதியும்: ஆர்எஸ்எஸ்ஸின் நிலை என்ன?

Published On:

| By Minnambalam Desk

இந்தியா இரண்டு முக்கியமான தேசிய தினக் கொண்டாட்டங்களை மேற்கொள்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரண்டில் புது தில்லியின் கம்பீரமான சென்ட்ரல் விஸ்டா அவென்யூவில் நடக்கும் குடியரசு தின விழா மிகவும் வண்ணமயமானது. மிகுந்த பளபளப்புடனும் நாட்டின் மகிமையைப் பறைசாற்றும் விதத்திலும் இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். இந்தப் பளபளப்புக்கும் மகிமைக்கும் மத்தியில் இந்த நாளை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 1935ஆம் ஆண்டின் ஏகாதிபத்தியச் சட்டத்தை மாற்றி சுதந்திர தேசத்தின் அரசியலமைப்பை இந்தியா நடைமுறைப்படுத்தியது. constitution and Manusmriti

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்த 75ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கடந்த மூன்று மாத காலமாகப் பல நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 26 அன்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தில் உரிய மரியாதையுடன் இந்தத் தருணத்தைக் கொண்டாடினார். அரசியலமைப்புச் சபை கூடி அரசியலமைப்பை உருவாக்கிய இடம் இதுதான்.

பி.ஆர். அம்பேத்கர் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அம்பேத்கருக்குப் புகழ் மாலைகள் சூட்டப்பட்டன. கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை ஆதரித்துப் பேசுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது என்று கருத்து வெளியிட்டுச் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அம்பேத்கர்மீதான இந்தக் கூடுதல் பாராட்டு அந்தச் சர்ச்சையை மழுங்கடிப்பதற்குத் தேவைப்பட்டது.

அமித் ஷாவின் பேச்சால் எழுந்த சர்ச்சை ஒருவழியாகத் தணிந்தது. ​அதுபோலவே ​மற்றொரு சர்ச்சையும் வரலாற்றின் திரைக்குப் பின்னால் அமைதியாகவும் மறைமுகமாகவும் தள்ளப்படுகிறது. நமது அரசியலமைப்பை மாற்றி அந்த இடத்தில் மனு ஸ்மிருதி அல்லது மனுவின் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற சங்கப் பரிவாரங்களின் விருப்பத்தையே குறிப்பிடுகிறோம். மனு ஸ்மிருதி கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சட்டத் தொகுப்பாகும்.

ஆளும் பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் பகிரங்கமாகக் கொண்டாடுகிறது. எனினும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை உள்ளடக்கிய இந்துத்துவ அமைப்புகளின் குடும்பம் இந்தச் சட்டம் குறித்து என்ன சொல்கிறது என்பதை ஆராய வேண்டியுள்ளது.

முஸ்லிம் லீகைப் போலவே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ்) இந்து மகாசபாவும் மோகன்தாஸ் காந்தியின் தலைமையிலான ஆங்கிலேயர்களுக்கு எதிரான தேசிய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து விமர்சித்துவந்தன.

அதே ஆண்டில் ஜூலை 31 தேதியிட்ட இதழிலும் சுதந்திர தினத்தையொட்டி வெளியான ஆகஸ்ட் 14 தேதியிட்ட இதழிலும் இந்திய தேசியக் கொடியாகக் காவி நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆர்கனைசர் பத்திரிகை வலியுறுத்தியது. துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் படேல், ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை 18 மாதங்கள் சிறையில் அடைத்தார்.

அரசியலமைப்பு விஷயத்தில் ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை ஆகிய இரு அமைப்புகளுமே கடுமையான நிலைப்பாட்டை எடுத்தன. நவம்பர் 30, 1949 அன்று, அரசியலமைப்புச் சபை இந்தியாவின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, “நமது அரசியலமைப்பில் பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசியலமைப்பு வளர்ச்சி பற்றி எந்தக் குறிப்பும் இல்லை” என்று ஆர்கனைசர் அறிவித்தது.

இன்றுவரை, “மனு ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் உலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளன. தன்னிச்சையான கீழ்ப்படிதலையும் இணக்கத்தையும் இவை உருவாக்குகின்றன. ஆனால் நமது அரசியலமைப்பு நிபுணர்களுக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை” என்றும் அது கூறியது.

பிப்ரவரி 6, 1950 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ், “மனு நம் இதயங்களை ஆள்கிறார்” என்று அறிவித்தது. மனு ஸ்மிருதி மீதான ஆர்எஸ்எஸ்ஸின் உறுதிப்பாட்டை அது மீண்டும் வலியுறுத்தியது, “இந்துக்களின் அன்றாட வாழ்க்கை இன்றும்கூட மனு ஸ்மிருதியிலும் பிற ஸ்மிருதிகளிலும் உள்ள கொள்கைகளாலும் உத்தரவுகளாலும் தாக்கம் பெறுகிறது என்பதே யதார்த்தம்” என்று அது உறுதிபடக் கூறியது.

மோடி பகிரங்கமாக வழிபடும் இந்து மகாசபைத் தலைவர் வி.டி. சாவர்க்கர், “பாரதத்தின் புதிய அரசியலமைப்பைப் பற்றிய மோசமான விஷயம் என்னவென்றால், அதில் பாரதீயத் தன்மை எதுவும் இல்லை” என்றார்.

“மனு ஸ்மிருதி நமது இந்து தேசத்திற்கு வேதங்களுக்கு அடுத்த நிலையில் வணங்கத்தக்க வேதமாகும். இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சாரம்-பழக்கவழக்கங்கள், சிந்தனை, நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையாக மாறியுள்ளது. பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக, தெய்வீகப் பயணத்தைக் குறிக்கிறது. இன்றும்கூட கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்க்கையிலும் நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டவை. இன்று மனு ஸ்மிருதி என்பது இந்துச் சட்டம்” என்று அவர் விளக்கினார். (இந்தியில் சாவர்க்கரின் எழுத்துக்களின் தொகுப்பு, தொகுதி 4, பக்கம் 426, வெளியீடு பிரபாத், தில்லி).

சுதந்திரம் அடைந்து இருபதாண்டுகளுக்குப் பிறகும் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வல்கர் அரசியலமைப்பைக் கடுமையாக விமர்சித்தார். அவருடைய சிந்தனைகளின் தொகுப்பான Bunch of Thoughts (தமிழில் ஞானகங்கை) என்னும் நூலில் இந்த விமர்சனம் இடம்பெற்றுள்ளது. “நமது அரசியலமைப்பும் மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்த சிக்கலானதும் கலவையானதுமாகும்,” என்று அவர் எழுதினார். “நம்முடையது என்று அதில் எதுவும் இல்லை. நமது தேசிய நோக்கம் என்ன, நமது வாழ்க்கையில் நமது முக்கிய அம்சம் என்ன என்பது குறித்து அதன் வழிகாட்டும் கொள்கைகளில் ஏதேனும் இருக்கிறதா? இல்லை!” என்று அவர் கூறியிருக்கிறார்.

மனு ஸ்மிருதியையும், பெண்களைப் பற்றிய அதன் இழிவான கருத்துகளையும் சுருக்கமாகப் பார்ப்போம். நூலின் இரண்டாம் பகுதியின் 213, 214, 215 ஆகிய வசனங்கள் பெண்களை மயக்குபவர்கள் என்றும் அவர்களைத் திருத்த முடியாது என்றும் கூறுகின்றன. அவர்களைத் தவிர்க்குமாறு ஞானிகளை எச்சரிக்கின்றன.

மூன்றாம் பகுதியின் 3முதல் 18வரையிலான வசனங்கள் பெண்களைப் பண்டமாகச் சித்தரிக்கின்றன. அவர்களை உடல் ரீதியாக அவமானப்படுத்துகின்றன. கீழ் நிலையிலுள்ள சாதிகளைச் சேர்ந்த எல்லாப் பெண்களின் மீதும் பிராமண ஆண்களுக்கு உரிமையுள்ளதாகக் கூறுகின்றன. ஆனால் சூத்திரப் பெண்களை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றன.

புத்தகம் 3, வசனம் 340, “ஒரு சண்டாளன் [தீண்டத்தகாதவர்], பன்றி, சேவல், நாய் மாதவிடாயில் உள்ள பெண்” ஆகியவற்றுக்குச் சமம் என்கிறது. ஐந்தாவது புத்தகம் பெண்களை ஆண்களின் சொத்தாகச் சித்தரிக்கிறது. ஆண்கள் நல்லொழுக்கம் இல்லாவிட்டாலும் பாலியல் வக்கிரம் கொண்டவர்களாக இருந்தாலும், ஒழுக்கக்கேடானவர்களாகவும், எந்த நல்ல குணங்களும் இல்லாதவர்களாகவும் இருந்தாலும், பெண்கள் தொடர்ந்து தங்கள் கணவர்களை வணங்கிச் சேவை செய்ய வேண்டும் என்று வசனம் 157 அறிவிக்கிறது.

இந்துத்துவ ஆதரவாளர்களால் கொண்டாடப்படும் மனு ஸ்மிருதி இரக்கமற்ற வகையில் சாதிப் பாகுபாட்டை முன்வைக்கிறது. ஒரு சில எடுத்துக்காட்டுகள் போதுமானவை. புத்தகம் 1, வசனம் 91, “உயர் நிலையில் உள்ள வர்ணத்தவர்களுக்குப் பக்தியுடனும் முணுமுணுப்பு இல்லாமலும் உண்மையுடனும் சேவை செய்வதே ஒரு சூத்திரனின் கடமை என்று கடவுள் கூறினார்” என்று அறிவிக்கிறது.

புத்தகம் 3, வசனம் 156 சூத்திர மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பவர்களைத் தகுதியற்றவர்களாக அறிவிக்கிறது. புத்தகம் 4இன் 78முதல் 81வரையிலான வசனங்கள் சூத்திரர்கள் கல்வி பெறத் தகுதியற்றவர்கள் என்று மிகவும் சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறுகின்றன. இந்தத் தடையை மீறும் எந்த ஆசிரியரும் நரகத்திற்குச் செல்வார்கள் என்றும் சொல்கின்றன.

பண்டைய இஸ்லாமியத்திற்கு முந்தைய இந்தியாவில் சிறந்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவஞானிகள், ஆசிரியர்கள் ஆகியோர் இருந்ததாகவும், தனித்துவமான கல்வி நிறுவனங்கள் இருந்தன என்றும் அடிக்கடி சொல்லப்படுகிறது. இத்தகைய பெருமைகளைக் கேட்கும்போது அந்தக் காலத்தில் நிலவிய ​​இந்தத் தண்டனை விதிகளையும் மனுவாதக் கோட்பாடுகளால் விதிக்கப்பட்ட சமூக யதார்த்தங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தப் பெருமைகள் எதுவும் பெரும்பான்மையானவர்களுக்குக் (சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள்) கிடைக்கவே இல்லை.

“சூத்திரர்கள் முன்னிலையில் பிராமணர்கள் வேதங்களைப் படிக்கவே கூடாது” என்று மனு ஸ்மிருதியின் புத்தகம் 4, வசனம் 99 கூறுகிறது.

சட்டவிரோதமாக அறிவைப் பெறும் சூத்திரர்களுக்கான தண்டனையை மனு ஸ்மிருதி கொடூரமாக விவரிக்கிறது. அவர்களின் வாயில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுவது போன்ற (புத்தகம் 8, வசனம் 72) தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே புத்தகத்தின் 270, 271 ஆகிய வசனங்கள் ஒரு சூத்திரன்  ஒரு பிராமணனுக்குச் சவால் விடுத்தால் அவன் வாயில் சூடான நீண்ட இரும்புக் கம்பியைச் செருகுவது அல்லது அவரது நாக்கை வெட்டுவது போன்ற தண்டனைகளைப் பரிந்துரைக்கின்றன.

புத்தகம் 8இன் 50, 56, 59 வசனங்கள் சூத்திரர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை என்றென்றும் அடிமைப்படுத்த முடியும் என்றும், அவர்களை யாராலும் ஒருபோதும் விடுவிக்க முடியாது என்றும் கூறுகின்றன.

எந்தச் சமரசமும் இல்லாமல், மிகவும் ஈவிரக்கமின்றி தனது இலக்குகளை நோக்கிப் பயணிப்பதில் ஆர்எஸ்எஸ் உறுதி கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக 1980களின் பிற்பகுதியில், அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்திலேயே ஒரு ராமர் கோவிலைக் கட்டுவதாக அது சபதம் செய்தது. இறப்புகள், அழிவுகள், நீதித்துறை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அதைச் செய்து முடித்தது. காஷ்மீரிகளுக்குச் சில வரலாற்று நன்மைகளை நீட்டித்த அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை சங்கப் பரிவார் எதிர்த்தது. 370ஆவது பிரிவை நீக்குவது என்னும் இலக்கை அடையும்வரை 70 ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத்தியது. இறுதியில் சாதித்துக்கொண்டது.

அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்ற தனது மூன்றாவது இலக்கை நோக்கி அது தொடர்ந்து முன்னேறிவருகிறது. இஸ்லாமியச் சட்டத்தில் உள்ள முத்தலாக் (மூன்று முறை தலாக் கூறி ஒரு ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்தல்) முறையைச் சட்ட விரோதமானது என்று பாஜக அரசு அறிவித்தது.

இந்தப் பின்னணியில் மனு ஸ்மிருதியின் மீதான அதன் மதிப்பு அச்சமூட்டுகிறது. இந்திய அரசியலமைப்பை நீக்கிவிட்டு மனு ஸ்மிருதியை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற அதன் திட்டம் இன்னும் இருக்கிறதா என்பதைச் சங்க பரிவார் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது.

ஜவஹர் சிர்கார் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். இந்திய அரசின் முன்னாள் செயலர்.

நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share