”தொகுதி மறுவரையறை… தென்னிந்தியாவிற்கு எதிரான சதி”: உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

Published On:

| By christopher

Constituent redelineation is conspiracy against South India

தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய பிராந்திய கட்சிகளின் உரிமைகளை பறிக்க நடத்தப்படும் சதி என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல ஊடகமான ஏபிபி நெட்வொர்க் ”தி சதர்ன் ரைசிங்’ என்ற  தென்னக எழுச்சி உச்சிமாநாட்டினை நடத்தி வருகிறது.

இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அரசியல், சமூக, திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

திராவிட ஆட்சி தான் காரணம்!

அவர் பேசுகையில், ”இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து மாநிலத்திலும் ஒரே நிலைதான் இருந்தது. ஆனால் தமிழகத்தில் இன்று நாம் காணும் அனைத்து வளர்ச்சிக்கும் திராவிட ஆட்சி முறைதான் காரணம்.

நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை வழங்கியவர் கலைஞர். உணவு பொருட்களை குறைந்த விலைக்கும், கட்டணமின்றி அனைவருக்கும் கொண்டு சேர்த்தது நம் திராவிட முன்னேற்ற கழக அரசு.

இன்று இந்தியாவிலே உணவுக் கொள்முதல், பொது விநியோக முறை, கல்வி, மருத்துவம், தொழில், தொழில்நுட்பம் என அனைத்திலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

ஆனால் பாஜக ஆளாத மாநிலங்களில் அரசின் பணிகளை சீர்குலைக்கவே ஆளுநர்களை அனுப்பி வருகிறது மத்திய அரசு” என்றார்.

மக்கள் தொகை… எதிராக பயன்படுத்தும் பாஜக!

மேலும் அவர், “மத்திய அரசு 70 களில் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை ஊக்குவித்தது. தென்னிந்திய மாநிலங்கள் திட்டத்தை திறம்பட செயல்படுத்தின.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தாத வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தற்போது குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி விகித வேறுபாட்டை தான் இன்று நமக்கு எதிராகவே பயன்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது மத்திய அரசின் திட்டத்தை சரியாக கடைபிடித்த தென்னிந்திய மாநிலங்கள் தற்போது தண்டிக்கப்பட உள்ளன என்பது தெளிவாகும்.

இரண்டு முறை முடக்கப்பட்டது!

ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகை விகிதத்தில் இடங்களைப் பெற வேண்டும் மற்றும் தொகுதிகள் மக்கள்தொகையின் அளவிற்கு சமமாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கட்டளையிட்டுள்ளது.

“1952 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களின் தொகுதிச் சீரமைப்புக்காக ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆணையங்கள் இரண்டு விஷயங்களைப் பரிந்துரைத்தன – மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை சட்டமன்ற இடங்கள் உள்ளன என்பது.

மத்திய அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை 1970களில் கொண்டுவந்து மக்கள் தொகையைக் குறைக்க மாநில அரசுகளை தள்ளியது. இந்தக் கொள்கை அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கைவிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் மூலம் 2000 ஆம் ஆண்டு வரை மக்களவை இடங்களின் மறுவரையறையை முடக்கியது.

அதன்பின்னர் 2001ஆம் ஆண்டு மீண்டும் தொகுதி மறுவரையறை பிரச்சினை வந்தபோது, தொகுதிகளை இழக்க வாய்ப்புள்ள மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக, அப்போதைய என்.டி.ஏ அரசாங்கம் மற்றொரு அரசியலமைப்பு திருத்தத்தை – அரசியலமைப்பின் 84 வது திருத்தத்தை கொண்டுவந்தது. அதன்படி மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை என்பது முடக்கப்பட்டது.

திமுக முன்னணியில் போராடும்!

இந்த காலக்கெடுவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. தொகுதி மறுவரையறை  மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமே தங்களது மக்களைவை தொகுதிகளை இழக்கும்.

மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் மக்கள் தொகை கணக்கீட்டின்படி எல்லை நிர்ணயம் செய்தால், தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும். தற்போதைய 39 இடங்களிலிருந்து 31 இடங்களாக குறையும். இது தென் மாநிலங்களின் குரலை அடக்குவதற்கான தெளிவான முயற்சி.

தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய பிராந்திய கட்சிகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நமது உரிமைகளை பறிக்க நடத்தப்படும் சதியை நாம் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

மாநில உரிமைகளுக்காகப் போராடும் இந்த நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்திய பாஜக அரசின் இந்த சூழ்ச்சியான நடவடிக்கையை எதிர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

உரிமைச் சிந்தனையுள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த நடவடிக்கையை எதிர்ப்பார்கள். மேலும், இதற்காக உருவாகும் போராட்டத்தில் திமுக முன்னணியில் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ரத்து!

இனி நோக்கியா ஃப்ளிப் மாடலிலும் UPI ஸ்கேன் வசதி!