சேலம் மாநகராட்சியில் நடைபெறும் விழாக்களில் தாம் புறக்கணிக்கப்படுவதாக அத்தொகுதி திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது.
இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்து ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தாம் அழைக்கப்படவில்லை என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி தவிர, சேலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தாம் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 26) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்து ராஜ் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.
என்னை புறக்கணிப்பது, எனக்கு வாக்களித்த 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம்.
நான் போராட்டக்காரன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்யவிடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும்.
சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது.
அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத்தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பொள்ளாச்சி பொதுக்கூட்டம்: திமுகவில் இணைந்த அதிமுக, பாஜகவினர்!