ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வேறு யாரோ செய்த சதி செயலாக தான் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் நேற்று(அக்டோபர் 25) மாலை பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து சென்னை ஆளுநர் மாளிகை முன்பு தற்போது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், “திமுக அரசுக்கு யார் கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது நடைபெறாது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
ஆளுநர் மாளிகையின் முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் எந்த சட்ட ஒழுங்கும் கெட்டுவிடவில்லை.
பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியை உடனடியாக போலீசார் கைது செய்தனர் என்பது அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்துவிட்டது. இந்த நிலையில் எந்த அடிப்படையில் குற்றவாளி தப்பிவிட்டதாக ஆளுநர் மாளிகை ட்விட் செய்துள்ளது என்பது தெரியவில்லை.
கோட்டாட்சி தலைவர் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் 8 மாத காலை சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் தான் வெளியே வந்துள்ளார். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் போல் தற்போது பேசி வருகிறார். எனவே உரிய விசாரணைக்கு பிறகு எதற்காக அவர் குண்டு வீசினார் என்பது தெரியவரும். நிச்சயமாக இது கண்டித்தக்க ஒன்று. தமிழ்நாட்டில் இதுபோன்ற அசாம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முதலில் இந்த சம்பவம் ஆளுநர் மாளிகையில் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகை முன்பாக சாலையில் நடந்த சம்பவம் இது. ஆளுநர் மாளிகையில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழக அரசு மீதும் வெறுப்பை பரப்பி கொண்டிருக்கிற முதல் நபர் ஆளுநர் ஆர்.என்.ரவி தான். நாங்கள் அதனை எப்போதும் செய்யவில்லை.
ஆர்.என்.ரவி தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் போல் ஒவ்வொரு ஊராக சென்று வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகிறார். ஆளுநர் கூறும் பொய் கருத்துகளுக்கு மக்களிடம் விளக்கம் தர வேண்டியது அரசின் கடமை. அதனை தான் நாங்கள் செய்கிறோம்.
நேற்று நடந்த சம்பவத்திற்கு திமுகவோ அல்லது கூட்டணி கட்சிகளுக்கோ எந்தவித தொடர்புமில்லை. எங்கோ மன நோயாளி செய்த தவறுக்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வேறு யாரோ செய்த சதி செயலாக தான் இது இருக்க வேண்டும்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி!
குடியரசுத் தலைவர் சென்னை வருகை: முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்!