“என்னை கொலை செய்ய சதி” : அதிகாலை 3 மணிக்கு போலீசுக்கு எதிராக சி.டி.ரவி போராட்டம்!

Published On:

| By Kavi

கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜக எம்.எல்.சி சி.டி ரவி இன்று(டிசம்பர் 20) அதிகாலை 3 மணிக்கு சாலையில் அமர்ந்து போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடக சட்டப்பேரவையிலும் அமித்ஷா பேசியது குறித்த விவாதம் நடைபெற்றது.

அப்போது பாஜக மாநில தலைவரும் மேலவை உறுப்பினருமான சி.டி ரவி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பேசினார்.

இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹப்பால்கர் பதிலடி கொடுத்தார்.

அப்போது பெண் அமைச்சரை பார்த்து சி.டி ரவி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சட்டப்பேரவை அவை தலைவரிடமும் அமைச்சர் லட்சுமி புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “இது போன்ற மொழியை பயன்படுத்துவது பாலியல் தொல்லை கொடுப்பதற்கு சமம்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ரவி, “சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பாக பதிவான ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் சித்தராமையா எனது நடத்தையை குற்றம் சாட்டுகிறார்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பெண் அமைச்சரின் ஆதரவாளர்கள், சி.டி ரவியை சட்டப்பேரவை வளாகத்துக்குள்ளே தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேசமயம் தன்னை அவதூறாக பேசியதாக சிடி ரவி மீது நேற்று அமைச்சர் லட்சுமி காவல்துறையிலும் புகார் அளித்தார்.

இதன்பேரில் சி.டி ரவி மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை சட்டப்பேரவை வளாகத்துக்குள் வந்து சி.டி ரவியை போலீசார் கைது செய்ய முற்பட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை சட்டப்பேரவை வளாகத்தில் வைத்தே குண்டுகட்டாக போலீசார் கைது செய்து தூக்கி சென்றனர். அங்கிருந்து அவரை கானாபூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 20) அதிகாலை 3 மணியளவில் பெலகவியில் இருந்து ராம்துர்க் தாலுகாவுக்கு அழைத்து செல்லப்பட்டபோது, போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய சி.டி ரவி கர்நாடக காவல்துறைக்கு எதிராக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர், “ என்னை கொல்ல சதி நடக்கிறது. எனக்கு அடிபட்டுள்ளது” என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே அவர் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார், அமைச்சர் லட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் இருந்து பேசிய வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

அதில், “நேற்று இரவு 8 மணி அளவில் கானா காவல் நிலையத்துக்கு போலீசார் என்னை அழைத்து வந்தனர். என்ன வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது என்று கூட சொல்லவில்லை.

அதேசமயம் நான் கொடுத்த புகார் மீது போலீசார் எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யவில்லை. எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காங்கிரஸ் அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

பொய்யான வழக்கில் கைது செய்து என்னை கொலை செய்ய சதி செய்கிறார்கள். காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மூன்று மணி நேரமாகியும் எதற்காக என்னை அழைத்து வந்தார்கள் என்று கேட்டால் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார் சி.டி ரவி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

டாப் 10 செய்திகள்: ஈரோட்டில் ஸ்டாலின் முதல் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரை!

டிசம்பர் 30ல் குமரி கண்ணாடி பாலம் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share