11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

அரசியல்

தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஏற்கனவே கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்களுடன் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் எட்டு மண்டலங்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 12 ) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியதாவது : பள்ளிக்கல்வித் துறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இதற்குரிய இடங்கள் இருந்தும், தேவையான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில், ஆண்டுதோறும் காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலைமை உள்ளது. இதற்காக தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதிலும் அரசிடம் நிதி பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இதனால், ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. நீட் தேர்வை வெறும் 10 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில், பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி பெறும் மாணவர்களின் ஆறு மாத பயிற்சிகளை, ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மேற்கொள்ள வேண்டும் என தேசிய கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அதனை மாற்றி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்கும் வகையில் பி.எட் படித்தவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்திற்கு உள்ளதுபோல் தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பாக செயல்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். பாடத்திட்டங்களை வகுத்தல் உள்ளிட்டவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்யும் வகையில், கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்” என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் தொடக்க கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *