விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. விவசாயிகளுக்குப் பதிலாக கோடீஸ்வரர்களுக்கு அரசு கோடி கோடியாக கடன் தள்ளுபடி செய்து வருகிறது என்று ராகுல்காந்தி இன்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார்.
இந்த நடைபயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து ஹரியானாவில் தொடர்ந்து வருகிறது.
வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி உறுதி
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து ராகுல்காந்தி பேசினார். அப்போது, “வட இந்தியாவில் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் நாள்தோறும் இணைந்து வருகின்றனர்.
வட மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதற்கு இந்தக் கூட்டமே சாட்சி. இந்த நடைபயணம் நாளுக்கு நாள் அதிக மக்களை ஈர்த்து வருகிறது. ஏனெனில் அவர்கள் ஒற்றுமையாக, அன்பாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இளைஞர்களை பாழாக்கும் அக்னிவீர் திட்டம்
தொடர்ந்து அக்னிவீர் திட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர், “இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தில் அரியானா முன்னணியில் உள்ளது. முன்பு ஒரு ராணுவ வீரர் நாட்டிற்கு 15 ஆண்டுகள் சேவையாற்றி, முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டது.
தற்போது பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிவீர் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வேலையின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.” என்றார்.
கீதையின் வழியில் காங்கிரஸ்
தொடர்ந்து பேசிய அவர் , “புனித நூலான பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே நான் எனது பணியைச் செய்து வருகிறேன். அர்ஜுனன் மீன் கண்ணை குறிவைத்த போது, அடுத்து என்ன செய்வேன் என்று சொல்லவில்லை. கீதையிலும் உன் வேலையை செய் என்று தான் சொல்லியிருக்கிறது.
என்னைப் பற்றி என்ன சொன்னாலும், அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அது என்னைப் பாதிக்காது. நான் என் வேலையை தொடர்ந்து செய்வேன்” என்றார்.
விவசாயிகள் மீது மோடி தாக்குதல்
விவசாயிகளின் துயரம் குறித்து நரேந்திர மோடி அரசை ராகுல் கடுமையாக சாடினார். ”மோடி அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. விவசாயிகளுக்குப் பதிலாக கோடீஸ்வரர்களுக்கு அரசு கோடி கோடியாக கடன் தள்ளுபடி செய்து வருகிறது.
கறுப்புச் சட்டங்களையும், ஏற்றுமதி கொள்கையையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தி விவசாயிகள் மீது முழு தாக்குதல் நடத்தி வருகிறார் பிரதமர் மோடி. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. அதற்கு எதிர்மறையாக குறைந்து வருகிறது.
எரிபொருள் மற்றும் யூரியா விலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நமக்கு உணவளிக்கும் நாட்டின் முதுகெலும்பு தாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை விட்டுவிட்டு இந்தியா ஒருபோதும் முன்னேற முடியாது.”என்றார்.
பாஜகவிற்கு எதிரான யுத்தம்
நாட்டின் அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜகவிற்கு எதிராக நடப்பது காங்கிரஸ் நடத்துவது அரசியல் போட்டியல்ல. மாறாக இது வேற்றுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றிக்கு எதிரான கொள்கையுடைய பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கொள்கை யுத்தம்.
“இந்த யாத்திரை பாஜகவின் பிளவுபடுத்தும் திட்டத்திற்கு எதிரானது. இது அரசியல் யாத்திரை அல்ல. மாறாக இது மக்களை இணைக்கும் பயணம்.
சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் பயம் மற்றும் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரானது. நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்” என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கடும் குளிருக்கிடையே ஹரியானாவில் தற்போது நடந்து வரும் பாரத் ஜோடோ யாத்ரா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வழியாகச் சென்ற பிறகு வரும் 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிறைவடைய உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
துணிவு, வாரிசு: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிக்கெட் விலை!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே… மெயில் ஐ.டி. இருக்கா?