பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் உள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்து விடுவார்கள்” என்று கூறியிருந்தார்.
பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்ரல் 22) தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.
அதில், “இரு பிரிவினரிடையே பகையை உருவாக்கும் நோக்கத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
“மத உணர்வுகளை தூண்டும் வகையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும்” என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தவிர பாஜகவினருக்கு எதிராக 16 புகார்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவில் புதிய உறுப்பினர்களை நியமித்தது, தூர்தர்ஷன் லோகோவை காவி நிறத்தில் மாற்றியது,
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி டபொன் கோகாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம், உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசியல் விளம்பரங்களில் அரசு திட்டங்களுடன் பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தியது,
கேரள மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான விவகாரம், மணிப்பூரில் வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை,
அரசியல் விளம்பரங்களில் ராமர் மற்றும் ராமர் கோயில் கட்டப்பட்டதை தொடர்ந்து பாஜக பயன்படுத்துவது என 16 புகார்களை அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம், பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாக தி இந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழுக்கு வரும் ‘குண்டூர் காரம்’ ஹீரோயின்… ஹீரோ யாருன்னு பாருங்க!
நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி : 34ஆவது முறையாகக் காவல் நீட்டிப்பு!