சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, அவர் உட்பட எல்லாரும் எதிர்பார்த்தபடியே பிப்ரவரி 26 இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி காலை அவர் மீது பதியப்பட்ட மதுபான கொள்கை தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். காலை டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ஆம் ஆத்மி கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற மணிஷ் சிசோடியா, ‘நான் எப்போது என் பத்திரிகையாளர் பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றேனோ அப்போதில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் என் மனைவிதான் கவனித்துக் கொள்கிறார்.
இன்றும் என் குடும்பம் எனக்காக நிற்கிறது. இன்று நான் ஒருவேளை கைது செய்யப்பட்டாலும் எங்களது கட்சித் தோழர்கள் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறித்தான் சிபிஐ அலுவலகத்துக்குள் சென்றார். அவர் சொன்னது மாதிரியே எட்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டார் மணிஷ் சிசோடியா.
மணிஷ் சிசோடியாவை கைது செய்வதற்கு டெல்லி மதுபான விற்பனை கொள்கையில் ஆம் ஆத்மி அரசு இயற்றிய சட்டம்தான் காரணம். இந்த சட்டம் பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடுவதாக கூறி சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் சிபிஐ மணிஷ் சிசோடியாவை விசாரணைக்கு வரச் சொல்லி கைது வரை சென்றிருக்கிறது இந்த விவகாரம்.
டெல்லி மதுபானக் கொள்கையில் என்ன நடந்தது?
கோவிட் வைரஸ் டெல்லியை உலுக்கிக் கொண்டிருந்த நிலையில் 2021 மே மாதம் டெல்லி ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
டெல்லி அரசின் கலால் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் மணிஷ் சிசோடியாதான் அந்த சட்டத்தை டெல்லி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த சட்ட மசோதா டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோது பல்வேறு வகைகளிலும் விதிகளை மீறுவதாகவும் திருப்பி அனுப்பினார்.
மீண்டும் திருத்தங்களுடன் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது டெல்லி மதுபான கொள்கை மசோதா. அதை மீண்டும் திருப்பி அனுப்பினார் துணை நிலை ஆளுநர்
அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு டிடிஏவைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் துணைநிலை ஆளுநர். DDA (DELHI DEVEOLPOMENT AUTHORITY) என்ற இந்த அமைப்பில் டெல்லி சட்டமன்றம், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இருப்பார்கள். துணை நிலை ஆளுநர் தனது முந்தைய பரிந்துரையில் இதுபற்றி குறிப்பிடவில்லை. இப்படி பல்வேறு முரண்பாடுகள் மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவின.
இதற்கிடையே டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வி.கே.சக்சேனா நியமிக்கப்பட்டார். அவர் 2022 மே மாதம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கலால் கொள்கை (2021-22) யை, ‘பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக’ அறிந்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
புதிய கலால் கொள்கை ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் உருவாக்கப்பட்டது என்றும், தொடர்ந்து சட்டவிரோதமான நிதியை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொள்வதற்காக குற்றம் சாட்டப்பட்டது.
உரிமம் வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்குதல், உரிமக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல் அல்லது குறைத்தல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி எல்-1 உரிமத்தை நீட்டித்தல் ஆகியவை இந்த புதிய கொள்கையில் இடம்பெற்று ஊழலுக்கு இடமளிப்பதாக துணை நிலை ஆளுநர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து 2022 ஆகஸ்டு மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. டெல்லி மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் நான்கு அரசு அதிகாரிகளின் வீடுகள் உட்பட 21 இடங்களில் 2022 ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தப்பட்டது. இதன் பின் டெல்லி துணை முதல்வர் மீதான விசாரணை தொடங்கியது.
மணிஷ் சிசோடியா சிபிஐ ஆஜர்!
கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மனிஷ் சிசோடியா சிபிஐயால் ஒன்பது மணி நேரம் விசாரிக்கப்பட்டார். விசாரணைக்குப் பின் அவர், ‘டெல்லி மதுபான கொள்கை வகுத்ததில் எந்த ஊழலும் நடக்கவில்லை.
ஆனால் பாஜக தனது ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த வழக்கைப் பதிவு செய்து பயமுறுத்துகிறது. ஆம் ஆத்மி கட்சியை உடைக்கும்படியும் டெல்லி முதல்வராக என்னை அமர வைக்க தயார் என்றும் என்னிடம் பேரம் பேசப்பட்டது” என்று அதிர்ச்சிப் புகார்களை கூறினார்.
இதற்கிடையே பிப்ரவரி 19 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராகவேண்டும் என்று மணிஷ் சிசோடியாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஒரு வார காலம்அவகாசம் கேட்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ஆஜரானார்.
ஆஜராக செல்லும்போதே, இம்முறை நான் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்திருந்தார் சிசோடியா. அவ்வாறே எட்டு மணி நேர விசாரணைக்குப் பின் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
இது பாஜகவின் அசிங்கமான அரசியல் என்று வர்ணித்துள்ள டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், ‘சிசோடியாவை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் பெரும்பாலானோர் இந்த வழக்கில் ஏதும் இல்லை என்றும், சிசோடியாவை கைது செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதையும் தாண்டிய அரசியல் அழுத்தம் காரணமாக சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார் .
மணிஷ் சிசோடியா கைதுக்கு காங்கிரஸ் ஆதரவு!
டெல்லி துணை முதல்வர் கைதை எதிர்த்து ஆம் ஆத்மி நாடு முழுதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதேநேரம் மற்ற எதிர்க்கட்சிகளும் டெல்லி துணை முதல்வர் கைதைக் கண்டித்து வருகின்றன. ஆனால் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் குமார்,
“ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டடதை வரவேற்கிறோம். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்படவேண்டும். ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி. ஆனால் அவர்கள்தான் ஊழல் செய்துள்ளனர், மதுபான கொள்கைக்கு பின்னால் இருக்கும் ஊழலை முதலில் வெளிக் கொண்டுவந்தது காங்கிரஸ்தான்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை காங்கிரஸ் முதலிலேயே முளைகிள்ளி எறிந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இதற்கிடையே டெல்லி துணை முதல்வர் சிசோடியா இன்று (பிப்ரவரி 27) மதியம் 3 மணிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 4-ஆம் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேந்தன்
மதுரை எய்ம்ஸ்: அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல்!
நாகாலாந்து மேகாலயா தேர்தல்: 1 மணி நிலவரம்!