ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4) உத்தரவிட்டுள்ள நிலையில், ராகுல் வருவார். கேள்விகள் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ புருனேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைவை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அவதூறு வழக்கில் இரண்டாண்டுகள் சிறை தண்டனை என்பது அதிகபட்சமானது என்பதால் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனால் அதானி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இந்தசூழலில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதானி குறித்து ராகுல் எழுப்பிய கேள்விக்கு மோடி பதில் சொல்ல முடியாததால் அவரது பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த சூழலில் ராகுல் காந்தியின் சிறை தண்டனை நிறுத்தப்பட்டதால் “அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவார். கேள்விகள் தொடரும்” என்று காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.
இந்தநிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியை திரும்ப பெற மக்களவை சபாநாயகரிடம் இன்றே முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
செல்வம்
”நானும் டெல்டா காரன் என்று சொல்லும் ஸ்டாலின்”- கொதித்த அன்புமணி