Congress protests against the income tax department today!

வருமான வரித்துறைக்கு எதிராக… நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறையை கண்டித்து அக்கட்சியினர் இன்று (மார்ச் 30) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2017-18 முதல் 2020-21 வரையிலான நிதியாண்டுகளுக்கான வருமான வரி மற்றும் அபராதமாக வட்டியுடன் ரூ.1,823.08 கோடியை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாக கூறி ரூ.200 கோடி அபராதம் விதித்தனர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸை மொத்தமாக முடக்க வருமான வரித்துறை இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்க பாஜக அரசு முயல்வதாக அக்கட்சியினர் குற்றச்சாட்டியிருந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

ரூ.1,823 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதனைக் கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, “இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். இதனைக் கண்டித்து அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகங்களில் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள்”எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலகத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது, பாஜக அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டெல்லியை தொடர்ந்து, லக்னோ, சத்தீஷ்கர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவர்களை போலீசார் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரகாண்டில் நடந்த போராட்டத்தின்போது பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஹரிஷ் ராவத், “எதிர்க்கட்சிகள் மீதான பாஜக அரசின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக அரசு பயன்படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்படுகின்றன. வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்புகிறது.

இதன்மூலம், நமது ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மைதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்”எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOLD RATE: சட்டென குறைந்தது விலை… சவரன் எவ்வளவுன்னு பாருங்க!

தாய்மொழி தமிழ்… மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: ஸ்டாலின் காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *