சேரி மொழி என விமர்சனம் செய்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு வீட்டின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் இன்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டம் நடத்தினர். congress protest in-front of khushbu house
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் திமுக ஆதரவாளரான சின்னத்துரைக்கு குஷ்பு அளித்த எக்ஸ் பதிவில், “சாரி…உங்களை போன்று எனக்கு சேரி மொழி பேச தெரியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
குஷ்புவின் இந்த பதிவுக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார், நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் எஸ்.சி,எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டின் முன்பாக காங்கிரஸ் எஸ்.சி,எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “கைது செய்…கைது செய்…குஷ்புவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்…”என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.
மேலும், குஷ்புவின் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும் சாணியை கரைத்து ஊற்றியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் குமார்,
“மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி போன்றோர் குஷ்பு பேசிய சேரி மொழி என்ற வார்த்தையை ஆதரிக்கிறார்களா? பாஜக பட்டியலின பிரிவு குஷ்புவின் பேச்சை கண்டிக்கவில்லை.
பட்டியலின மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்பதை அக்கட்சியில் உள்ள தலித் சமூகத்தினர் உணர வேண்டும்” என்று தெரிவித்தார்.
போராட்டம் குறித்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“தமிழகத்தில் தலித் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குஷ்பு வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தினால் பப்லிசிட்டி கிடைக்கும் என்பதால் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஒரு வாரத்திற்கு முன்பே போராட்டத்தை அறிவித்துவிட்டு 20 பேரை வைத்து மட்டுமே போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
மணிப்பூர் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்.
திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததும் அவரை தீய சக்தி என்று மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்தார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!
செல்வ கணபதி சிறை தண்டனை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
congress protest in-front of khushbu house