தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாளை(மார்ச் 27) இரவு உள்ளிருப்பு நடத்த போவதாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.
இதனையடுத்து அவரை, எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை நேற்று முன் தினம் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கடந்த 2 நாள்களாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டங்கள் நடைபெற்றன.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு நாளை வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும்.
ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும். சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேச வேண்டும்.
சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் ஒரு கோழை: பிரியங்கா காந்தி தாக்கு!
WWBC: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் வென்றார் நிகத்ஜரின்