congress protest in front of kushhu house

சேரி மொழி… குஷ்பு பிடிவாதம்… காங்கிரஸ் போராட்டம்!

அரசியல்

சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் பாஜக பிரமுகரும்  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் வீட்டு முன்பு நவம்பர் 27 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் எம்.பி ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார்.

த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில் குஷ்பு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “சேரி மொழி பேச தெரியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தான் பேசியதில் தவறு எதுவும் இல்லை. சேரி என்றால் பிரஞ்சில் அன்பு என்று பொருள் என்று விளக்கம் கொடுத்து வருகிறார் குஷ்பு.

இதனிடையே இன்று (நவம்பர் 25) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ”காங்கிரஸ் காரர்கள் ஏன் பொங்குகிறார்கள். போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளார்கள்,  ஆனால் என் வீட்டுப் பக்கம் யாரும் வரவில்லையே… பார்ப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

congress protest in front of kushhu house

இந்நிலையில் குஷ்பு வீட்டு முன்பு திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி.  பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிறந்த நடிகை என்பதை குஷ்பு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் சேரி மொழி என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, ஒருநாள் முழுவதும் தேடிப் பிடித்து பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குஷ்பு மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு தாங்காமல் சென்னையை விட்டு ஓடிவிட்டு மீண்டும் திரும்பிய குஷ்பு, சேரிக்கு புது அர்த்தங்களை சொல்லியிருக்கிறார். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்.

சேரி என்று அவர் பயன்படுத்திய இடம் திட்டுவதற்காகத்தான் என்பது அந்தப் பதிவைப் படித்த யாருக்குமே எளிதில் புரியும். இப்படியிருக்க தேடிப் பிடித்து அவர் காரணங்களை கூறும்போதே அவர் பக்கம் தவறு இருப்பதும், அதை மறைக்கப் போராடுவதும் தெரிகிறது. அடித்தட்டு மக்கள் என்றைக்குமே தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்பட்டதில்லை. ஆனால், இருக்கும் இடமோ என்னவோ அந்தப் பழக்க தோஷத்தில் குஷ்பு சேரி மொழி என்று பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதித்திருக்கிறார்.

ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்த நாம் இன்றைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளோம். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு பட்டியலின, பழங்குடியின மக்கள் இன்றைக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். இதனை உணர்ந்து குஷ்புவின் திமிர்த்தனமான சேரி மொழி என்ற கருத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்.

இன்றைக்கு தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கிறோம். குஷ்பு கக்கிய விஷத்தை கடந்து போனால் மீண்டும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டிய கொடுமை ஏற்படும். அதோடு வட மாநிலங்களில் பட்டியலின, பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்முறை போல் தமிழ்நாட்டிலும் எளிதாக நடத்தலாம் என்ற எண்ணம் ரத்தவெறி பிடித்த கும்பலுக்கு ஏற்படும் என்பதையும் பட்டியலின, பழங்குடியின மக்கள் உணர வேண்டும்.

congress protest in front of kushhu house

எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கள்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்டி., பிரிவின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குஷ்பு வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தேஜாஸ் விமானத்தில் மோடியின் ‘தம்ஸ் அப்’ பயணம்!

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல சீரியல் நடிகை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *