தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று(ஜூன் 26) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர்: மாற்றப்படுகிறாரா அழகிரி?என்ற தலைப்பில் நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று(ஜூன் 27) கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“நண்பர் ஒருவர் கேட்டார் டெல்லி பயணத்தின் நோக்கம் என்னவென்று. நான் டெல்லிக்கு வருகிற அரசியல் தலைவரே கிடையாது. நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு முறை மட்டும் தான் டெல்லிக்கு வந்திருக்கிறேன்.
டெல்லியில் கட்சி தலைமை இருக்கிறது…அடிக்கடி இல்லை என்றாலும் கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். நான் சென்னையில் இருந்து டெல்லி வந்ததும் தலைவர் மாற்றமா என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு மாணவ பருவத்திலேயே இந்த கட்சிக்கு வந்தவன்.
சென்ற சட்ட மன்ற தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சி 72 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. எங்களுக்கு போட்டி பாஜக என்று சொல்கிறார்கள்.
அவர்கள் கூட்டணியில் 23 இடங்களை பெற்றனர் ஆனால் நான்கு இடங்களில் தான் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது.
இன்றைக்கும் என்னுடைய கருத்து இதுதான்…எவ்வளவு தொகுதிகளை பெறுகிறோம் என்பதை விட எவ்வளவு வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம். இந்த முறை கூட்டணியில் முன்பை விட அதிக தொகுதிகளை நாங்கள் கேட்டு பெறுவோம்.
தமிழ்நாட்டில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் மற்றும் ராகுலின் பரப்புரைகள் தான் காரணம். அது தனிமனிதர்களின் வெற்றி அல்ல” என்றார்.
மேலும், “தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை.தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான்.
காங்கிரஸ் மாநில தலைவராக எனக்கு உரிய பணியை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். யார் தலைவராக இருந்தாலும் 2024 மக்களவைத் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம்.
தமிழக அரசியல் தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவுடன் ஆலோசனை நடத்தினேன். பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன்.” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மதுரை பேருந்து நிலையம் ஆய்வு: மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு!
குழந்தைகளுடன் ஆபத்தான பயணம்: தந்தை கைது!
டாஸ்மாக் கடைகள் மூடல் : ஊழியர்களுக்கு வேலை அறிவிப்பு!