தலைவர் தேர்தல் : சோனியாவை சந்தித்த சசி தரூர்

அரசியல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சசி தரூர் எம்.பி. இன்று சந்தித்தது தேசிய அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் மட்டுமல்லாது மற்ற கட்சிகளும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்று ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றின.

இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தச்சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த சிலர், சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதில், தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 50சதவிகித பேர் 50 வயதுக்குக் குறைவானவர்களாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு ஒரு பொறுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கையை ஏற்று இதுவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 650 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கோரிக்கையைத் தானும் ஏற்பதாக சசி தரூர் சமூக வலைதளத்தில் இன்று காலை 10.26 மணிக்குப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துள்ளார். சோனியா அழைப்பின் பேரில் சசி தரூர் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவருடன் தீபேந்தர் ஹூடா, ஜெய் பிரகாஷ் அகர்வால் மற்றும் விஜேந்திர சிங் ஆகியோரும் சென்றனர். அப்போது கட்சி விவகாரம் பற்றிப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு சசி தரூரும் போட்டியிடலாம் என்று கூறப்படும் நிலையில் இன்றைய சந்திப்பு முக்கியத் துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிரியா

ராகுல் காந்தி நடைப்பயணமும் சர்ச்சையும்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *