மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மூலம் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயல், புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கியிருந்தார். இதையடுத்து, நவம்பர் 21, 2022 அன்று தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அருண் கோயல் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு ஏன் அவசரம் காட்டியது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
தொடர்ந்து, அருண் கோயல் நியமனம் தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருவதாக கூறி, அவரது நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் கடந்த 2024 மார்ச் 9ஆம் தேதி அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அருண் கோயலின் ராஜினாமா செய்தது தேசிய அளவில் விவாத பொருளாகியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு ஆணையர்கள் பணியிடங்களை நிரப்ப மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான குழு 10 பேரை தேர்வு செய்யும், அவர்களில் இருவரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும் என தகவல்கள் வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக் குழு, தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை மார்ச் 15-ஆம் தேதிக்குள் நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.
காங்கிரஸை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) சட்டம், 2023ன் கீழ் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுபடிதான் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
2023ஆம் ஆண்டு சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர் நியமன குழுவில் தலைமை நீதிபதி இல்லாமல் பிரதமர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் இடம்பெறுவார்கள்.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தசூழலில் தான் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று ஜெயா தாகூர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாலியல் வழக்கில் தண்டனை : ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!