”மல்லிகார்ஜுனே கார்கேவும் நானும் எதிரிகள் அல்ல” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதன் வேட்பாளர்களாக மூத்த தலைவர்கள் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக இன்று (அக்டோபர் 6) சென்னை வந்தார் சசிதரூர். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சசிதரூரின் தமிழகப் பயணம் குறித்து இன்று நாம், சசிதரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம் என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, இன்று சென்னை வந்த அவர், காமராஜர் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதற்குப் பிறகு அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் நானும் மல்லிகார்ஜுனே கார்கேவும் எதிரிகள் அல்ல. யார் வெற்றிபெற்றாலும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க பாடுபடுவோம். கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுக்குக் கடும் போட்டியை கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இன்று இரவு 8 மணிக்கு சசி தரூர் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
ஜெ.பிரகாஷ்
கெட்டுப்போன உணவு: 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
ஆன்லைன் ரம்மி: ரயில் முன் பாய்ந்த வாலிபர் !