காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (அக்டோபர் 14) சென்னை வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக இருவரும் கட்சிக்குள் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி சென்னை வந்தார் சசி தரூர்.
அவரது வேட்பு மனுவை தமிழகத்தில் இருந்து முன்மொழிந்தவர்களில் முக்கியமானவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
சென்னைக்கு சசிதரூர் வருக வருக என்று ட்விட்டரில் வரவேற்பு கொடுத்த கார்த்தி சிதம்பரம், சென்னையில் இருக்கும் தனது ஆதரவாளர்களிடம் கூறி சசி தரூருக்கு வரவேற்பு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால் சசி தரூர் வரும்போது கார்த்தி சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கு வரவில்லை. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் சசி தரூர் வரும்போது சத்தியமூர்த்தி பவனுக்கு வரவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (அக்டோபர் 14) தமிழ்நாட்டுக்கு வருகிறார், மாலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகிறார்.
அவரை வரவேற்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கார்கேதான் சோனியா, ராகுலின் விருப்பமான வேட்பாளர் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி முழுதும் பரவியிருக்கிறது.
இதை உறுதிப்படுத்துவதைப் போல இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கார்கே அளித்த பேட்டியில், “காந்திகள் இல்லாமல் காங்கிரஸ் இல்லை. அவர்கள் இந்த நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள்.
மெஜாரிட்டி இருந்தபோதிலும் கூட பிரதமர் பதவியையே வேண்டாம் என்றவர் சோனியா காந்தி. அதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இப்போது நாங்கள் சிறுசிறு பொசிஷன்களுக்காகதான் போட்டியிடுகிறோம்.
எல்லாவற்றையும் சோனியா, ராகுலிடம் கேட்டு முடிவெடுக்க மாட்டேன். ஆனாலும் அவர்களது ஆலோசனை இல்லாமல் நான் முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சசி தரூர் பிரச்சாரத்துக்கு செல்லும் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் அவருக்கு பெயரளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது.
கார்கேவுக்குதான் அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது இந்த வகையில் தமிழ்நாட்டிலும் கார்கேவுக்கே பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்றில் இருந்தே சத்தியமூர்த்தி பவனில் இருந்து கார்கேவுக்கான வரவேற்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரை பவனுக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
சசி தரூக்கு இல்லாத ஜரூர் வரவேற்பு கார்கேவுக்கு கிடைக்கிறது.
–வேந்தன், பிரகாஷ்
முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட நடிகை!
அரசு வழங்கும் இலவச காலணி மாணவிக்கா? அம்மாவுக்கா?