காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி அக்கட்சியின் எம்.பிக்களால் மீண்டும் ஒருமனதாக இன்று (ஜூன் 8) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன.
இதில் 240 இடங்களை கைப்பற்றிய பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 99 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று காலை நடைபெற்றது. அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள், ராஜ்யசபா எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தியின் பெயரை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார். அதனையடுத்து சோனியா காந்தி கட்சி எம்.பி.க்களால் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்கே, “இது பெரிய விஷயம், சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுவார். அவர் தொடர்ந்து கட்சிக்கு சேவை செய்கிறார், இதற்காக நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் ’எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து சிந்தித்து முடிவெடுப்பேன்’ என்று ராகுல் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? : விஜய்சேதுபதி விளக்கம்!
இங்கெல்லாம் பார்க்கிங் கட்டணம் கிடையாது : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!