காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை 4-வது நாளாக குமரியில் உள்ள மூளகுமூடில் இருந்து இன்று (செப்டம்பர் 10) தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிவு பெற உள்ளது.
இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது 3வது நாள் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் நிறைவு செய்தார்.
இன்று 4-வது நாளாக குமரியில் உள்ள மூளகுமூடில் இருந்து ராகுல் காந்தி பயணத்தை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து மார்த்தாண்டம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி காலை 10 மணிக்கு நேசமணி நினைவு கிறிஸ்துவ கல்லூரியை அடைகிறார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவுக்கு செல்லும் ராகுல்காந்தி, 4-வது நாள் நடைபயணத்தை கேரள மாநில எல்லையான செருவாரகோணத்தில் நிறைவு செய்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளார். அங்கு அவர் 18 நாட்கள் சாலை வழியாக நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா