தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் விரைவில் பாஜகவில் சேருவதற்கான வேலைகளில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வாகவும், சட்டமன்ற கொறடாவாகவும் இருக்கும் விஜயதரணி தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏ வாக இருந்து வருகிறார்.
இவரது தாத்தா, அப்பா அம்மா ஆகியோர் பாரம்பரியமாக இந்திய தேசிய காங்கிரஸ் வழியில் வந்தவர்கள், இவரது தாயார் பகவதி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
இப்படி பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த விஜயதரணி எம்.எல்.ஏ, வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி, தமிழகம் வரும் இந்திய பிரதமர் மோடி தலைமையில் பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி பல முயற்சிகளுக்கு பிறகு விஜயதரணியைத் தொடர்புக்கொண்டுக் கேட்டபோது, ’அப்படி ஒரு முடிவு இல்லை’ என்று விரக்தியுடன் பேசியுள்ளாராம்.
எனினும் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் விஜயதரணி பாஜகவுக்கு மாறப்போவது உறுதிதான் என்று அழுத்தமாக சொல்கிறார்கள். பாஜகவுக்கு போகப்போவது உண்மையா என்று உறுதி செய்துக்கொள்ள, மின்னம்பலம் சார்பாக விஜயதரணி எம்எல்ஏவை நீண்ட முயற்சிகளுக்கு பிறகு தொடர்புகொண்டோம்.
கேள்வி : நீங்கள் பாஜகவுக்கு போகப்போவதாகவும், மோடி தமிழகம் வரும்போது அவரது தலைமையில் பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல்கள் வருகிறதே?
பதில் : மோடி தமிழகம் எப்போது வருகிறார்?
கேள்வி : பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ள பிப்ரவரி 25 ஆம் தேதி வருகிறார் என்று உங்களுக்கு தெரியாதா?
பதில் : எனக்கு தெரியாது.
கேள்வி : நீங்கள் காங்கிரஸ் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்களே?
பதில் : உண்மைதான்… கொடுக்க வேண்டிய நேரத்தில் தகுதியான பதவி கொடுப்பது இல்லையே!
கேள்வி : அப்படி என்றால் பாஜகவுக்கு போவது உறுதியா?
பதில் : தற்போது ஐடியா இல்லை!
கேள்வி : பாஜகவுக்கு போவது பற்றி தொடர்ந்து செய்திகள் வருகிறது, அதற்கு நீங்களும் மறுப்பு சொல்லாமல் மௌனம் காத்துவருவது, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்லலாமா?
பதில் : நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை
எப்படியோ தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ சிலர் பாஜகவுக்கு போகப்போவது உறுதி என்கிறார்கள் பாஜக முக்கிய நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
’ஓ… இவரு தான் அந்த ரோடு ராஜாவா?’ : வீடியோ வெளியிட்ட சென்னை போலீஸ்!
”போர்க்களத்தைவிடக் கொடூர சூழல்” : விவசாயிகள் போராட்டம் குறித்து ஸ்டாலின் வேதனை!