ஒரே முகத்தை கொண்டு வர மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரஸ் கட்சி இழுத்து மூடும் நிலையில் இருப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி விமர்சித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மக்களவையில் உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் உறுதியை நான் பாராட்டுகிறேன்.
பல தசாப்தங்களாக நீங்கள் அரசாங்கத்தில் அமர்ந்திருந்த விதம் தான் நீங்கள் எதிர்க்கட்சியில் தொடர்ந்து உட்கார தீர்மானித்திருக்கிறது. அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் தோல்வியடைய மக்கள் ஆசீர்வதிப்பார்கள்.
எதிர்க்கட்சிகளில் பலர் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். அதாவது அவர்கள் மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவைக்கு செல்ல விரும்புவதாகவும் கேள்விப்படுகிறேன்.
எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சியாகவே உட்கார முடிவெடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். நாட்டிற்கு நல்ல எதிர்க்கட்சிகள் தேவை என்று நீண்ட காலமாகவே கூறி வருகிறேன்.
அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் கட்சிகளில் இருப்பதைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் ஒரே குடும்பம் ஆட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாஜகவில் உள்ள வம்ச அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டிய போது, “ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எந்த கட்சியும் நடத்தவில்லை. ஆனால் ஒரு குடும்பம் ஒரு கட்சியை நடத்தி, அதே குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரஸ் கட்சி இழுத்து மூடும் நிலையில் உள்ளது” என்று காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.
உலகின் 3ஆவது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். இது மோடியின் உத்தரவாதம் என்று தெரிவித்த அவர், ”பாஜக ஆட்சியில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம். இதை காங்கிரஸ் வேகத்தில் செய்திருந்தால் 100 ஆண்டுகள் எடுத்திருக்கும். 10 ஆண்டுகளில், 40,000 கிமீ ரயில் பாதைகளை மின்மயமாக்கினோம். இதை காங்கிரஸின் வேகத்தில் செய்திருந்தால் 80 ஆண்டுகள் ஆகியிருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி எல்பிஜி சிலிண்டர்களை வழங்கியுள்ளோம். இதை காங்கிரஸ் வேகத்தில் செய்திருந்தால் 60 ஆண்டுகள் எடுத்திருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தியை குறிப்பிட்டு பேசிய அவர், ”ஐரோப்பியர்களை போல இந்தியர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள் இல்லை என்று நேரு தனது உரையில் சொல்லியிருக்கிறார். நாடு முன்னேறும் போதெல்லாம், மக்கள் சுயநலத்தில் ஈடுபடுவதாக மக்களை இந்திரா காந்தி குறைவாக மதிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களைப் பற்றிய காங்கிரஸ் அரச குடும்பத்தின் சிந்தனை இதுவாகவே இருந்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பணவீக்கத்தைக் கொண்டுவருகிறது” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘மெட்டி ஒலி’ 2-வது பாகத்தை இயக்கப்போவது இவர்தான்!
எந்நேரமும் கைது? அமர் பிரசாத் ரெட்டிக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு!