தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்கு எதிராக நாளை (ஏப்ரல் 8) காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை மற்றும் தாம்பரம் – செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் பிரதமர், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மறுநாள் முதுமலை சென்று ஆஸ்கர் விருது பெற்ற ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க உள்ளார். எனவே பிரதமர் வருகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் வருகைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல் காந்தி பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வருகைக்கு தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!
24 மணி நேர தீவிர போலீஸ் பாதுகாப்பில் பொம்மன்-பெள்ளி தம்பதி!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!