முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இன்று (நவம்பர் 11) நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.கே. முரளிதரன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இன்று (நவம்பர் 11) மின்னம்பலத்துடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர், “ராஜிவ் காந்தி ஒரு தனி நபர் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்கு 100 சதவீதம் தன்னை ஒப்படைத்த மாபெரும் தலைவர்.
அவரை கொலை செய்தவர்கள் 30 வருடம் சிறையில் இருந்துவிட்டார்கள் என்று விடுதலை செய்தாலும் கொலை கொலைதான். கொலையாளிகள் என்றும் கொலையாளிகள்தான்.
அதிலும் 4 பேர் வெளிநாட்டுக் கொலையாளிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது விடுதலை செய்துள்ள இலங்கைக்காரர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவார்கள் என்பது தெரியாது.
அவர்களைச் சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும். அவர்களை உயிரோடு விட்டு காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தவறு செய்திருக்கிறது.
தற்போது மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து காங்கிரஸ் கட்சியை கொச்சைப்படுத்துகின்ற, தொண்டர்கள் மனம் வருந்தக்கூடிய செயலை செய்திருக்கிறார்கள்.
எங்கள் தலைவர்கள் இதற்கான எதிர்ப்பை எடுத்துக்காட்டக்கூடிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வருகிற நவம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கூட்டவிருக்கிறார்.
அந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த செயலை எதிர்த்துக் கண்டன தீர்மானம் போடப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
மேலும் அவர், “அனைவரும் நீதிமன்றம் சொல்கிறது என்று சொல்கிறார்கள். நீதிமன்றம் எப்படி நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
நீதிமன்றம் என்ற ஒரு அழகான பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கொண்டு இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் என் குற்றச்சாட்டு.
நான் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தலைவணங்குகிறேன். காங்கிரஸ் கட்சி நீதிக்குத் தலைவணங்குவதில் எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்தது கிடையாது.
ஆனால் இந்த தீர்ப்பிற்குப் பின்னால் இருக்கக்கூடிய தீராத விளையாட்டுப் பிள்ளை அரசியலையும் நாம் பார்க்க வேண்டும். இதை நான் மட்டும் சொல்லவில்லை. பொதுவெளியில் இது குறித்து மக்களிடம் கருத்துக் கேளுங்கள்” என்று கூறினார்.
6 பேர் விடுதலை : சட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி – முதல்வர்