கொடி எரிப்பு, ரத்தக் காயம்: பாஜக- காங்கிரஸ் மோதல்!

அரசியல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் காங்கிரஸாருக்கும்,  பாஜகவினருக்கும் இடையே  இன்று  (ஏப்ரல் 3) கடும் மோதல் ஏற்பட்டது.

ராகுல் காந்தி மீதான  தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த வகையில் தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று ஏப்ரல் 3 ஆம் தேதி மாலை, நாகர்கோவில் இந்திராகாந்தி சிலை முதல் செட்டி குளம் வரை   பேரணி நடத்தினார்கள். பேரணி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்துகொண்டிருந்தபோது  அதன் அருகே பாஜக அலுவலகம் இருந்தது. பாஜக அலுவலகத்தைப் பார்த்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவை எதிர்த்து கடுமையாக முழக்கமிட்டனர். அப்போது திடீரென்று பாஜக அலுவலகத்தின் உள்ளே இருந்து காங்கிரஸ் பேரணி மீது கற்களும், பாட்டில்களும் வீசப்பட்டன.

இதைக் கண்டு கோபமான காங்கிரஸார் பாஜக அலுவலகம் முன்பு மறியலில் அமர்ந்தனர். அங்கே கடும் பதட்டம் ஏற்பட்டது.   அலுவலகத்துக்குள்ளே இருந்து வந்த பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ்  காங்கிரஸாரிடம் இருந்து கொடிகளைப் பிடுங்கினார். பின் காங்கிரஸ் கொடியை பாஜகவினர் தீ வைத்து எரித்தனர்.  இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டு சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் உடனடியாக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பேசியிருக்கிறார். முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார்.

இதுகுறித்து இன்று இரவு முகநூல் பதிவிட்ட விஜய் வசந்த எம்.பி.   “இன்று நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் நடத்திய அமைதிப் பேரணியை சீர்குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் அதன் மாவட்டத் தலைவர் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். அறவழிப் போராட்டத்தை எதிர்க்க வன்முறையை தூண்டி விட்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் காங்கிரஸ் கட்சியினர் புனிதமாக கொண்டு நடக்கும் எமது கொடியினையும் பாரதிய ஜனதா கட்சியினர் எரித்துள்ளனர். பாரதிய ஜனதா அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிரான காங்கிரஸ் கட்சியின் அறவழிப் போராட்டங்கள் தொடரும்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.
தமிழக காவல்துறை உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தமிழக பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வேந்தன்

ஐ.பி.எல்: வரலாற்று சாதனை படைத்த தோனி

சூர்யா – ஜோதிகா: தென்மண்டல ஐஜியிடம் புகார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “கொடி எரிப்பு, ரத்தக் காயம்: பாஜக- காங்கிரஸ் மோதல்!

  1. வார்த்தை கையாடலில் கூட வன்மத்தை மட்டுமே காட்டுகிறார் திரு.அண்ணாமலை அவர்கள். இதிலிருந்தே தெரிகிறது திரு.விஜய் வசந்த் அவர்கள் தெளிந்த அரசியல் செய்கிறார் மற்றும் வார்த்தைகளை தெளிவாக கையாள்கிறார். திரு.அண்ணாமலைக்கு இன்னமும் அந்த பக்குவம் வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *