காங்கிரஸ் தேர்தல் குறித்து பாஜக விமர்சனம் செய்ததற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் சோனியா காந்தியே, இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார்.
ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து வருவதால், அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்துவருவதுடன், மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு தாவி வருகின்றனர்.
இதற்கு காரணமாய், காந்தி குடும்பம் அல்லாத தலைமை வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சிக்குள் எழத் தொடங்கின.

இதையடுத்து, வரும் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் குறித்து பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி, கடந்த அக்டோபர் 1ம் தேதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துகு அளித்த பேட்டியில்,
“காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வந்தாலும் அவர்கள் சோனியா காந்தி குடும்பத்தின் கைப்பாவைபோலத்தான் செயல்பட போகிறார்கள்.

மல்லிகார்ஜுன கார்கேவோ அல்லது வேறு யாரோ… யார் தலைவராக இருந்தாலும் வெறும் முகத்தை மட்டும் காட்டுவார்கள். உண்மையான முடிவுகள் அனைத்தும் காந்தி குடும்பத்தினரால்தான் எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜகவின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று (அக்டோபர் 4) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக தலைவர் ஆவதற்கு ஜெ.பி. நட்டா எப்போது வேட்புமனு தாக்கல் செய்தார்?
எந்த தேர்தல் அதிகாரியின் முன் வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பதை அறிய முயற்சிக்கிறேன்? காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் பொதுமக்களிடையேயும் ஊடகத்தினிரிடையேயும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சகுனம். மக்கள் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்ததாக இந்த தேர்தல் இருக்கும் என்று நினைக்கிறேன்’ என அவர் கிண்டலாய்ப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்