காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று மாலை 4 மணிக்கு நடந்து முடிந்தது.
மொத்தம் 9500 பேர் வாக்களித்ததாகத் மத்திய காங்கிரஸ் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்டோபர் 17) காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காகத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் நேரடியாகப் போட்டியிட்டனர்.
இன்று காலை தேர்தல் தொடங்கிய நிலையில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களித்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கிருந்தபடியே வாக்களித்தார்.
பெங்களூருவில் மல்லிகார்ஜுன கார்கேவும், திருவனந்தபுரத்தில் சசி தரூரும் வாக்களித்தனர்.
தமிழகத்தில் சத்ய மூர்த்திபவனில் நடைபெற்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வாக்களித்தனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 711 வாக்காளர்களில் 659 பேர் வாக்களித்துள்ளனர்.
மாலை 4 மணியளவில் தேர்தல் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து மத்திய காங்கிரஸ் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்த்ரி கூறுகையில், 9,900 உறுப்பினர்களில் 9500 பேர் வாக்களித்தனர். 96 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையிலிருந்து 50 பேர் வாக்களித்துள்ளனர்.
வெளிப்படைத்தன்மையுடன் வாக்குப்பதிவு நடந்தது. சிறிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாநிலங்களில் 90 சதவிகிதத்துக்கும் கூடுதலாகப் பதிவாகியுள்ளது.
தேர்தலின் போது எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. அமைதியான முறையில் நடந்தது. மற்றக் கட்சிகள் இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை 3 வாக்குப்பெட்டிகள் வந்துள்ளது.
டெல்லியில் மட்டும் 87 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் யாருக்கு யார் வாக்களித்தனர் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் ஒருவருக்கும் தெரியாது” என்று கூறினார்.
நாளை மறுநாள் (அக்டோபர் 19) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியா- தினகரனா? முக்குலத்து முன்னாள்களின் முக்கிய ஆலோசனை!
அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்: ஜோதிடர் கணிப்பு!