டிஜிட்டல் திண்ணை: காங்கிரசை ஏன் திமுக மதிப்பதில்லை? சத்தியமூர்த்திபவனில் வெடித்த குரல்!

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில படங்களை அனுப்பியது. அதை ஒருமுறை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தன் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுக கூட்டணி ஆரோக்கியமாக தொடர்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவந்தாலும் உள்ளுக்குள் தொடர்ந்து சலசலப்புகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த ஜூலை 28,29 தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் துவக்க விழாவில் கலந்துகொண்ட மோடி தமிழக அரசின் ஏற்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.

அந்த நிகழ்வில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் மேடையில் வெளிப்படுத்திய உணர்வுகளும், உடல்மொழிகளும் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அதிகமாகியிருப்பதை உணர்த்தியது.

அதற்கு வலுப்படுத்துவது போல மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை கைது, வீட்டுக் காவல் என நடவடிக்கைகளுக்கு உள்ளானார்கள்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்தது. மோடிக்கு எதிரான போராட்டங்களுக்காக காங்கிரஸார் கைது செய்யப்படுவதை வெளிப்படையாக கண்டித்தார் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. அதேநேரம் பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்காக திமுக அரசைப் பாராட்டினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்த விசித்திரமான அரசியல் சூழ்நிலையில்தான் ஜூலை 30 ஆம் தேதி கேரளாவின் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் நிகழ்வில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது உரைக்குப் பிறகு சிலரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இது ஆரோக்கியமான முறையில் தொடரும்’ என்று பதிலளித்தார்.

இதே ஜூலை 30 ஆம் தேதிதான் கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா சென்னை வந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆண்டுதோறும் விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சித்தராமையாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 30 மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அந்த விழாவுக்காக ஜூலை 30 மதியமே சென்னை விமான நிலையத்துக்கு வந்தார் சித்தராமையா.

congress dmk alliance conflicts

அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிற்பகல் 12 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சித்தராமையா அங்கே காபி குடித்துவிட்டு அங்கிருந்து நேரடியாக திமுக தலைமையகமான அறிவாலயத்தை நோக்கித்தான் சென்றார்.

சித்தராமையா சென்னை வருவதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாக தமிழக காங்கிரஸ் தலைமையில் இருந்து திமுக தலைமையிடம் நேரம் கேட்கப்பட்டது. முதல்வரும் ஒ.கே. சொன்னார்.

ஜூலை 30 பிற்பகல் அறிவாலயத்துக்குச் சென்றார் சித்தராமையா. அவருடன் அழகிரி, திருமாவளவன் ஆகியோரும் சென்றனர். மிகச் சரியாக ஐந்து நிமிடங்கள்தான் ஸ்டாலினுடனான சந்திப்பு.

மிக சம்பிரதாயமாக நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் விருது பெறுவதற்கு சித்தராமையாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஐந்து நிமிடங்களில் சந்திப்பு முடிந்து முதல்வர் புறப்பட்டுவிட்டார்.

இதற்குப் பிறகு திருமாளவனிடம் பேசிய காங்கிரஸ் முக்கியப் புள்ளிகள், ‘ ரொம்ப காலமாக நம்ம கூட்டணித் தலைவரான முதல்வர் ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்களாலேயே சந்திக்க முடியவில்லை.

எப்ப நேரம் கேட்டாலும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இன்னிக்கு நீங்க சித்தராமையாவுக்கு விருது கொடுத்ததால நம்ம கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலினை ஐந்து நிமிடம் பார்க்க முடிஞ்சிருக்கு. உங்களுக்குதான் நன்றி சொல்லணும்’ என்று விரக்தியாக சிரித்திருக்கிறார்கள்.

congress dmk alliance conflicts

‘கலைஞர் திமுக கூட்டணியில் இருந்தபோது ஒரே ஒரு போனில் அவரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்., அவர் முதல்வராக இருந்தபோதும் இந்த நிலைமை இருந்தது.

ஆனால் ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டணியில் சக கூட்டணிக் கட்சித் தலைவர்களே முதல்வரை சந்திக்க போராட வேண்டியிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை உரிய முறையில் அழைக்கவில்லை.

காங்கிரஸ் மீதான அடக்குமுறையையும், மோடியையும் கண்டித்து செஸ் ஒலிம்பியாட் விழாவை புறக்கணித்தபோது… கூட்டணிக் கட்சி என்ற முறையில் கூட திமுக அதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைக்கவில்லை.

போனால் போகட்டும் என்றுதான் இருந்தது. ஆனால் மறுநாளே திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி என்று கேரள விழாவில் பேசுகிறார் முதல்வர்’ என்கிறார்கள் காங்கிரஸார்.

congress dmk alliance conflicts

கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடந்த தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலும் எதிரொலித்தது. 75 ஆவது சுதந்திர தினத்துக்காக நாடு முழுதும் பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சி நடத்த இருக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையின் உரை அதிர்வுகளைக் கிளப்பும்படியாக இருந்தது.

அவர் பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சி ஏன் வீழ்ந்து போச்சு? காங்கிரஸ் கட்சியை ஏன் எல்லாரும் கேலி பேசுகிறார்கள்? எல்லாத்துக்கும் காரணம் நாம்தாங்க. நாம் எங்கே ஒற்றுமையா இருக்கிறோம்? அழகிரி அண்ணன் கோஷ்டி, இளங்கோவன் ஐயா கோஷ்டி. தங்கபாலு அண்ணன் கோஷ்டினு ஒருத்தரை மாற்றி ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் யார் நம்மை மதிப்பார்? நாம் ஒற்றுமையா இருந்தால்தானே நம்மை மதிப்பான்? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

நாம நம்ம குடும்பத்துக்குள்ள இதை பேசுறோம். அதனால்தான் வெளிப்படையாக பேசுகிறேன். இந்த கட்சியை ஒற்றுமைப்படுத்த கடவுளா வந்து செய்வாரு? நாம்தான் செய்யணும், நாம்தான் நம்மை சரிசெய்யணும். நாம் நம்மை சரிசெய்துகொண்டால்தான் எதிரியைப் பார்த்து கேட்க முடியும். எதிரியை விடுங்கள் நாம் நம்மை சரிசெய்துகொள்ளவில்லை என்றால் நம் நண்பரிடமே நம்மால் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற முடியாது.

டிரிபிள் டிஜிட்ல இருந்து டபுள் டிஜிட் ஆகி சிங்கிள் டிஜிட்டை நோக்கி நம்மை தள்ளுவது ஏன்? நம் கட்சிக்காரன் ஜெயிக்கணும்னு அவன் நினைக்கிறான். ஆனால் நம்மகிட்ட அந்த எண்ணம் இல்லையே? கூடவே இருக்கிற ஆள் தோற்கணும்னுதானே நம்ம ஆளு நினைக்கிறான். நம் ஆள் ஜெயிக்கணும்னு நினைக்கிறது கூட பரவாயில்லை. ஆனால், இன்னொருத்தர் ஆளு தோற்கணும்னு நினைக்கிறவங்களை வச்சிக்கிட்டு நாம என்ன பண்ண முடியும்?

congress dmk alliance conflicts

நம்மை நாம் வலிமைப்படுத்திக் கொள்ளாமல் யாரையும் குறை சொல்வதற்கு நமக்கு எந்த அருகதையும் கிடையாது. இன்னிக்கு தலைவராக அண்ணன் அழகிரி இருக்கிறார். இன்னிக்கு அவர்கிட்ட கூழைக் கும்பிடு போட்டுக்கிட்டு இருக்குறவங்க நாளைக்கு அவர் தலைவரா இல்லேன்னாலும் அவர் கூட நிக்கணும். நாளைக்கு அடுத்த தலைவர் வந்தவுடனே அவர்கிட்ட கூழைக் கும்பிடு போட்டு அழகிரி அண்ணனுக்கு எதிரா செயல்படக் கூடாது.

நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் அன்னை சோனியா காந்தி கொண்டுவந்தது. ஆனால் அதை தாங்கள்தான் கொண்டுவந்ததாக ஒரு அமைச்சர் சொன்னாரு. ‘அது சோனியா காந்தி கொண்டுவந்ததுங்கனு நான் சொன்னேன். கொஞ்சம் குரலை உயர்த்தியே சொன்னேன். எனக்கு பயம் கிடையாது. நான் யாருக்கும் பயப்படவேண்டும்னு அவசியம் கிடையாது. யாராவது அப்படியெல்லால் சொன்னால் நம்பாதீங்க. நான் யாரையும் அண்டிப் பிழைக்க மாட்டேன். யாராக இருந்தாலும் என் உரிமையை கேட்பேன்.

எனக்கு ஒரு சமூக அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்த கட்சி இது. அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கக் கூடிய கட்சி காங்கிரஸ் கட்சி. இந்த கட்சி நன்றாக இருந்தால்தான் நான் நன்றாக இருக்க முடியும்.

இந்த கட்சி நன்றாக இருந்தால்தான் நீங்களும் நன்றாக இருக்க முடியும். அதற்காக செயல்படுங்கள், ஒற்றுமையாக செயல்படுங்கள்’ என்று செல்வப் பெருந்தகை பேசப் பேச மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பார்வையாளர்களும் தொடர்ந்து கைதட்டி வரவேற்றார்கள். அதேநேரம் மேடையில் இருக்கும் தலைவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

இவரைப் போன்றவர்கள் மாநிலத் தலைமைக்கு வந்தால் கட்சி ஒருவேளை பிழைக்க வாய்ப்பிருக்கப்பா என்று கூட்டம் முடிந்து வெளியே வந்த மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கொடிக் கம்பத்துக்கு கீழே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *