டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் பாஜக? ராகுலுக்கு சென்ற மெயில்!

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இன்பாக்ஸில் சில புகைப்படங்கள் வந்தன.  சில உரையாடல்களுக்கு பிறகு வாட்ஸ்அப் டைப் செய்ய தொடங்கியது.

“ஜூலை மாதத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகளையும் சலனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி ஜூலை எட்டாம் தேதியே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

‘பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் 1954 முதல் 1964 வரை முதலமைச்சராக இருந்து ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட் சமர்ப்பித்து, இன்றைய நவீன தமிழகத்திற்கு அடித்தளம் அமைக்கிற வகையில் காமராஜர் அவர்களின் ஆட்சிமுறை இருந்தது. அவரது ஆட்சி முறையின் காரணமாகத் தான் தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது. 

எனவே, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஜூலை 15 அன்று ‘காமராஜர் ஆட்சி முறை’ என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் முன்னின்று இத்தகைய கருத்தரங்குகளை நடத்த இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் அந்தக் கருத்தரங்கம் அமைய இருக்கிறது”என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார் காங்கிரஸ் மாநிலத் தலைவரான கே. எஸ். அழகிரி. 

ஆனால் இன்று வரை அப்படிப்பட்ட காமராஜர் ஆட்சி மாடல் கருத்தரங்குகள் காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்படவில்லை.

திமுக ஆங்காங்கே திராவிட மாடல் பாசறைகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினரோடு ஒத்துழைப்பாக செயல்படுவதால் காமராஜர் ஆட்சி மாடல் கருத்தரங்கத்தை அழகிரியே வலியுறுத்தியும் இன்னமும் முன்னெடுக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தான் ஜூலை 17ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்த ஒரு சம்பவம், தமிழக மாநில காங்கிரஸ் தலைமை, டெல்லி தலைமை வரை சென்றுள்ளது.

ஜூலை 17ஆம் தேதி காமராஜர் பிறந்த தின விழாவை வெகு விமர்சையாக திண்டுக்கல் மாநகரத்தில் ஏற்பாடு செய்திருந்தார் காங்கிரஸின் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன். 5000 பேர் வரை கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி சிறப்புரை யாற்றினார்.

இந்த கூட்டத்தில் திட்டமிட்டதற்கு அதிகமாக தொண்டர்கள் குவிந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் நாற்காலிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்போது போலீசார் வந்து அனுமதித்த அளவுக்கு தான் நாற்காலிகள் போட வேண்டும் அதற்கு மேல் போடக்கூடாது என காங்கிரஸ்காரர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.  காங்கிரஸ் நிர்வாகிகள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இந்த விஷயத்தில் போலீசார் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். நாற்காலிகளை அப்புறப்படுத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேடையில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் காவல்துறையை எச்சரித்து ஆவேசமாகப் பேசினார்கள். ‘இந்தியாவுலயே இரண்டாவது பெரிய கட்சி. எங்களுக்கு அனுமதி தரமாட்டீங்களா…. அடக்குமுறையை வேற கட்சிக்கிட்ட பாத்துக்கங்க. நாங்க ஆங்கிலேயர்களையே பாத்தவங்க. நாங்க அனுமதி கேட்டதுலேர்ந்து இடைஞ்சல் பண்ணிக்கிட்டிருக்கீங்க. சின்ன கட்சிக்கெல்லாம் அனுமதி கொடுக்குறீங்க? ஆனா எங்களுக்கு தர மாட்டீங்களா? நீங்க எத்தனை கேஸ் போட்டாலும் சரி’ என்றெல்லாம் ஆவேசமாக பேசினார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து கூட்டம் நடக்கும் மணிக்கூண்டு பகுதிக்கு எம்ஜிஆர் சிலை வழியாக அழைத்து வரப்படுவதாக மாவட்ட தலைவர் மணிகண்டன் போலீசாரிடம் ஏற்கனவே ரூட் பர்மிஷன் வாங்கியிருந்தார். ஆனால் அதே தினத்தில் அதே ரூட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல அழகிரி வரும் வழியில் பாஜக கொடிகள் கட்டப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் கொடிகளை கட்டக்கூடாது என்றும் போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

‘நடக்கிறது எங்க கூட்டணி ஆட்சி. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தானே இருக்கு? பிஜேபி இருக்கா?’ என்று போலீசாரிடம் கேள்வி கேட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அழகிரி வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக போலீஸ் தடையை மீறி காங்கிரஸ் கொடிகளை போராடி கட்டினார்கள்.

இது மட்டுமல்ல திண்டுக்கல் கூட்டத்துக்கு வந்த மாநிலத் தலைவர் அழகிரிக்கு போதிய பாதுகாப்பையும் போலீசார் அளிக்கவில்லை. அதனால் மாவட்ட தலைவர் தனியார் ஜிம் பாய்ஸை அமர்த்தி ஹோட்டல் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் வரைக்கும்… கூட்டம் முடிந்து அவரை வழி அனுப்பும் வரைக்கும் பாதுகாப்பு அளித்திருக்கிறார்.

இந்த சம்பவங்கள் பற்றி மாநில காங்கிரஸ் தலைமைக்கும் டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்கும் தமிழகத்தில் இருந்து மின்னஞ்சல்களும் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு திமுக அரசின் போலீசார் ஒத்துழைப்பு தருவதில்லை. ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் கூட பரவாயில்லை. காங்கிரஸ் நிகழ்ச்சிகளை தடுக்கிறார்கள். திமுக அமைச்சர்கள் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக காமராஜர் மாடல் கருத்தரங்கத்தை கூட இன்னும் நடத்தாமல் வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். ஆனால் திமுக அரசின் போலீஸ் காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது’ என்று ராகுல் வரை அனுப்பிய அந்த  புகார்களில் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் சம்பவம் பற்றி திமுக தரப்பில் விசாரித்தால்… ‘திண்டுக்கல் மாவட்ட அமைச்சராக இருக்கும் ஐ.  பெரியசாமி, காங்கிரஸுடன் நல்லுறவில் தான் உள்ளார். வேறு எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவுக்கு மண்டல தலைவர் பதவியை காங்கிரசுக்கு கொடுத்தவர் அமைச்சர் பெரியசாமி. அவர் நல்லவராக இருந்தாலும் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகள் மூலமாக பிரச்சனைகளை ஏற்படுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திண்டுக்கல்லில் நடந்திருக்கிறது. நடந்த சம்பவங்கள் அமைச்சர் கவனத்திற்கும் சென்றுள்ளது’ என்கிறார்கள்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது, ‘மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போதே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை உத்தவ் தாக்கரே அரசின் போலீஸ் மூலமாகவே குஜராத் வரைக்கும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இது ராஜதர்மம். இந்த ராஜ தர்மம் தமிழ்நாட்டிலும் நடக்கும்’ என்று குறிப்பிட்டார்.

அதாவது தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டே திமுக கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்துவோம் என்பதுதான் அண்ணாமலையுடைய அந்த பேச்சின் சாரம். அதுதான் தமிழகத்திலும் நடந்து கொண்டிருக்கிறதா… இது திமுக அரசுக்கும் திமுகவுக்கும் தெரியுமா.. தெரிந்தும் அனுமதிக்கிறார்களா?’ என்று கேட்கிறார்கள் சத்திய மூர்த்தி பவனின் நிர்வாகிகள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

+1
1
+1
3
+1
0
+1
2
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *